/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரும்பு நடவு அதிகம் செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
கரும்பு நடவு அதிகம் செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 06, 2025 10:24 PM
செங்கல்பட்டு:மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, கரும்பு அதிகமாக நடவு செய்ய, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா விடுத்துள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு அடுத்த படாளம் கிராமத்தில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், பவுஞ்சூர், சீத்தனஞ்சேரி, உத்திரமேரூர், மேல்மருவத்துார், திண்டிவனம், வானுார் மற்றும் ஆலைப்பகுதி ஆகிய கோட்டங்கள் உள்ளன.
இந்த கோட்டங்களில் இருந்து, விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்பி வருகின்றனர். ஆலைக்கு, 2024 - 25ம் ஆண்டு அரவைப் பருவத்தில், 937 விவசாயிகளிடம் இருந்து, 70,136 டன் கரும்பு பெறப்பட்டது.
ஆலை அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, 2.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஜூன் 3ம் தேதி அரசு உத்தரவிட்டது.
இந்த நிதி, கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2025 - 26ம் ஆண்டு நடவுப் பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு, தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவிற்கு, ஏக்கருக்கு 7,450 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
அகலபாருடன் கூடிய ஒரு பருவ விதைக்கரணை நடவு செய்யும் விவசாயி களுக்கு, ஏக்கருக்கு 3,200 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, அதிக பரப்பில் ஆலைக்கு கரும்பு நடவு செய்ய, விவசாயிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

