/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தினம் 10 விபத்துகள் நடப்பதால் அச்சம் திக்... திக்..!:ஆக்கிரமிப்பு, மோசமான சாலையே காரணம்
/
தினம் 10 விபத்துகள் நடப்பதால் அச்சம் திக்... திக்..!:ஆக்கிரமிப்பு, மோசமான சாலையே காரணம்
தினம் 10 விபத்துகள் நடப்பதால் அச்சம் திக்... திக்..!:ஆக்கிரமிப்பு, மோசமான சாலையே காரணம்
தினம் 10 விபத்துகள் நடப்பதால் அச்சம் திக்... திக்..!:ஆக்கிரமிப்பு, மோசமான சாலையே காரணம்
ADDED : அக் 20, 2024 12:28 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக, 10 விபத்துகள் நடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு மற்றும் சாலை முறையாக பராமரிக்காததே விபத்துகளுக்கு காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
-செங்கல்பட்டு மாவட்டத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, இ.சி.ஆர்., சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை, சிங்கப்பெருமாள் கோவில் -- ஸ்ரீபெருமந்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளை தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படாததால், தினமும் விபத்துகளின் எண்ணிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் சிங்கப்பெருமாள் கோவில் - ஜி.எஸ்.டி., சாலையில் நான்கு பேர், செங்கல்பட்டில் 4 பேர், பூஞ்சேரியில் 2 பேர் என, தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் விபத்து சராசரி எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு 10 ஆக அதிகரித்து உள்ளது, வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் முறையாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக, மின் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாகவே அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. மேலும், உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. பல இடங்களில் சாலை சந்திப்புகளில் சிக்னல் இல்லாததால், முதியோர் கடும் அவதியடைகின்றனர்.
சாலையோரம் வாகன நிறுத்தும் இடங்களாகவும், விற்பனை நிலையங்களாகவும் மாறி உள்ளன. பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வாகனங்கள் அதிகம் கடக்கும் நெடுஞ்சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கிராம வாசிகள், எதிர்திசையில் வாகனங்களை இயக்குவது, மொபைல்போன் பேசியபடி வாகனங்களில் செல்வது விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதை போலீசார் தடுத்து அபராதம் விதிக்கும் போது, உள்ளூர் வாசிகள் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையில் சர்வீஸ் சாலை இல்லாதது விபத்துக்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் அலட்சியம்
அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், ஜல்லி, மண் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் செல்வது விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த வாகனங்கள் மீது கணக்கு காண்பிக்க மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் வீதிமீறல் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சுகுமாரன், 29,
செங்கல்பட்டு.