/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பறக்கும் 'டிரயல்' வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளில் அச்சம்
/
பறக்கும் 'டிரயல்' வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளில் அச்சம்
பறக்கும் 'டிரயல்' வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளில் அச்சம்
பறக்கும் 'டிரயல்' வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளில் அச்சம்
ADDED : ஜன 13, 2025 01:09 AM

மறைமலைநகர்:செங்கை புறநகர் பகுதியைச் சுற்றி செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த நெடுஞ்சாலைகளை ஒட்டி பல்வேறு கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இச்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், மகேந்திரா வேல்டு சிட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் புதிய ரக கார்கள், 'டிரயல்' எனும் சோதனை ஓட்டம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக, பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
புதிதாக தயாரிக்கப்பட்டும் கார்கள் அதிக வேகத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் அடிக்கடி சென்று வருகின்றன. அதிக வளைவுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ள சாலைகளில் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், இதுபோல அனுமந்தபுரம் சாலையில் சோதனை ஓட்டம் சென்ற வாகனம், கொண்டமங்கலம் அருகில் வனப்பகுதியில் விபத்தில் சிக்கியது.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், குடியிருப்பு பகுதிகளில் இது போன்ற சோதனை ஓட்ட வாகனங்கள் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.