/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
15 ஆண்டாக சாலை வசதியின்றி பனையூர் மீனவர்கள் அவஸ்தை
/
15 ஆண்டாக சாலை வசதியின்றி பனையூர் மீனவர்கள் அவஸ்தை
15 ஆண்டாக சாலை வசதியின்றி பனையூர் மீனவர்கள் அவஸ்தை
15 ஆண்டாக சாலை வசதியின்றி பனையூர் மீனவர்கள் அவஸ்தை
ADDED : நவ 14, 2024 01:32 AM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட, 6வது வார்டில், பனையூர் பெரியகுப்பம், பனையூர் சின்னகுப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிவாசிகள், நகர்ப்புறத்தில் வசிப்பது போல, நெருக்கமான இடத்தில் வசித்து வருகின்றனர். பனையூர் பெரியகுப்பம், மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 6 தெருக்கள் உள்ளன. இதில், 750க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பனையூர் சின்னகுப்பம், மொத்தம் 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2005ம் ஆண்டு, தார் சாலை அமைக்கப்பட்டது. பராமரிப்பு இன்றி, நாளடைவில் சாலைகள் பழுதடைந்தன.
சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், தினசரி சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என, பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, 6வது வார்டு கவுன்சிலர் வீரராகவன் கூறியதாவது:
நான் கவுன்சிலராக பதவி ஏற்று, மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக, பனையூர் மீனவர் பகுதியில் சாலை சேதமடைந்துள்ளது.
பதவி ஏற்றதில் இருந்து, பனையூர் பகுதியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து கவுன்சிலர் கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. மீனவர் பகுதி என்பதால், அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மக்களுடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

