/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை
/
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை
ADDED : செப் 28, 2025 12:33 AM

சாத்தணஞ்சேரி:சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு தோட்டங்களை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், காட்டுப்பன்றிகளை ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரும்பு அதிகம் பயிரிடுவதில் உத்திர மேரூர் ஒன்றியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர், கரும்பாக்கம், அரும்புலியூர், களியப்பேட்டை ஆகிய கிராமங்களில் கரும்பு சாகுபடி பிரதான விவசாயமாக இருந்து வருகிறது.
இப்பகுதிகளில் பயிரிடும் கரும்புகளை அறுவடைக்கு பின், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அரவைக்கு அனுப்புகின்றனர்.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்கின்ற மொத்த கரும்புகளில், 40 சதவீதம், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலம் மூலம் உற்பத்தி செய்கின்ற கரும்புகளாக உள்ளது.
நடப்பாண்டு பருவத்திற்கு இப்பகுதி விவசாயி கள் கடந்த ஜனவரியில் கரும்பு நடவு செய்துள்ளனர். அப்பயிர்கள் தற்போது அரையாண்டு கடந்து பாதி அளவு வளர்ச்சியை எட்டியுள்ளன.
இந்நிலையில், இரவு நேரங்களில் இப்பகுதி கரும்பு தோட்டங்களுக்கு கூட்டமாக செல்லும் காட்டுப்பன்றிகள், கரும்புகளை கடித்தும் அதன் கூர்மையான மூக்கால் கரும்பை உடைத்தும் நாசம் செய்து வருகின்றன.
இதனால், அக்கரும்புகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
கரும்பு சாகுபடியில் கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் தட்டுபாடு என, ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதாரம் கரும்பு விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.
தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தனபால் முன்னிலையில் சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி பகுதி கரும்பு விவசாயிகள் சமீபத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், கரும்பு சாகுபடியில் ஏற்கனவே பல்வேறு பிரச்னை உள்ள நிலையில் காட்டுப்பன்றி தொந்தரவு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பல வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை. எனவே, கரும்புக்கு முதன்மை எதிரியாக உள்ள காட்டுப்பன்றிகளை ஒழிக்க அவைகளை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், கரும்பு விவசாயம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிடும் என கூறினார் .
இந்நிலையில், உத்திரமேரூர் வனச்சரகர் ராமதாஸ் தலைமையிலான குழுவினர் நேற்று சாத்தணஞ்சேரி கரும்பு தோட்டங்களை ஆய்வு செய்து அப்பகுதி விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.
அப்போது, விவசாயிகள் பலரும் காட்டுப்பன்றி களை கட்டாயம் சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.