/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூடைக்கு ரூ.50 கமிஷன் நெல் கொள்முதலில் மோசடி
/
மூடைக்கு ரூ.50 கமிஷன் நெல் கொள்முதலில் மோசடி
ADDED : மார் 05, 2025 01:49 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 65 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு சார்பில் 27 நெல் கொள்முதல் நிலையங்களும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக 91 நெல் கொள்முதல் நிலையங்களும் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலான நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, 40 கிலோ மூட்டை ஒன்றிற்கு 50 முதல் 60 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்வதால், விவசாயிகள் நெல் வியாபாரிகளை நாடி செல்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர், வெங்கடேசன் கூறியதாவது:
விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
விவசாயிகளிடமிருந்து 40 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்றுக்கு, 50 முதல் 60 ரூபாய் வரை, உள்ளாட்சி பிரமுகர்கள், அரசியல் கட்சியை சார்ந்த நபர்கள், இடைத்தரகர்கள் வாயிலாக, கட்டாய வசூல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் தனி நபர் வியாபாரிகளை நாடுகின்றனர்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள இடைதரகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.