/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரெட், பால் கிடைக்குதா? அமைச்சர்கள் ஆய்வு!
/
பிரெட், பால் கிடைக்குதா? அமைச்சர்கள் ஆய்வு!
ADDED : அக் 15, 2024 09:00 PM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அமைச்சர்கள் நேரு, அன்பரசன் ஆகியோர், அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
ஈசா பல்லாவரம், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம், பல்லாவரம் பெரிய ஏரி, இரும்புலியூர் பகுதியில் நடைபெற்றுள்ள மழைநீர் கால்வாய், தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் நடந்துள்ள பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் நேரு கூறியதாவது:
மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு, இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான பிரெட், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களும், தேவையான அளவு உணவு சமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகரித்தால் மக்களை மீட்டு செல்ல படகுகள் தயார் நிலையில் உள்ளன.
தாம்பரம் மட்டுமின்றி குன்றத்துார், பூந்தமல்லி, மாங்காடு, ஆவடி போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி சார்பில், அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள், வடிகால் துார்வாரப்பட்டு, தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனகாபுத்துார் பகுதியில், குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.