விவசாயிகள் நலனுக்கான உழவர் சந்தைகள் முடக்கம்!முதல்வர் விஜய் புத்துயிர் அளிக்க எதிர்பார்ப்பு
விவசாயிகள் நலனுக்கான உழவர் சந்தைகள் முடக்கம்!முதல்வர் விஜய் புத்துயிர் அளிக்க எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 17, 2026 03:47 AM
ADDED : ஜூலை 16, 2026 09:31 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உழவர் சந்தைகள் முழு அளவில் செயல்படாமல் முடங்கி கிடப்பதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் விஜய், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர். விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு தகுந்த விலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழகம் முழுதும், 1999ம் ஆண்டு உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, பல்லாவரம், மேடவாக்கம், நங்கநல்லுார், கீழ்க்கட்டளை, கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. 2000ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் நடத்தப்படும் இந்த சந்தைகளில், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.
விவசாயிகள் காய்கறி விற்கவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் கைவினை உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் செய்யவும் மாத வாடகை, 1,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
தவிர, அரசு பேருந்துகளில் காய்கறி மூட்டைகளை இலவசமாக எடுத்து வரவும் அனுமதிக்கப்பட்டது. இதனால், காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு மக்கள் நேரடியாக வந்தனர்; விவசாயிகளும் பலனடைந்தனர்.
பேருந்து நிறுத்தம் இல்லாதது, சந்தைக்கு வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மக்கள் வருவது குறைந்தது. இதனால் விவசாயிகளும், உழவர் சந்தைகளில் கடைகளை நடத்துவதை தவிர்த்தனர்.
தற்போது பெயரளவிற்கு, ஒரு சில கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. அந்த கடைகளும் காலை முதல் மதியம் வரை மட்டும் செயல்படுகின்றன.
தவிர, அன்றாட வயல் பணிகளுக்காக கூலி ஆட்களை வைக்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும், உழவர் சந்தையில் கிடைக்கும் லாபத்தைவிட, அதிகமான தொகையை விவசாயிகள் செலவிட நேரிடுகிறது.
விவசாயிகள் சாகுடி செய்வதற்கு, வியாபாரிகள் முன்பணம் வழங்குவதால், காய்கறிகளை அவர்களுக்கு அளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் காய்கறிகளை உழவர் சந்தைகளில் விற்பதை குறைத்து வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், உழவர் சந்தைகள் மேம்படுத்த நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கினர். விவசாயிகள், காய்கறிகள் விற்பனை செய்ய, வேளாண் விற்பனை துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தற்போது பெரியளவில் மட்டுமே இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
உழவர் சந்தைகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவுத் துறையின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, குறைந்த வாடகையில் கடைகள் ஒதுக்கீடு செய்யலாம்.
சந்தையை மேம்படுத்தப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அங்காடியாக கட்டமைப்பு உருவாக்குவதன் மூலம் நுகர்வோரை அதிகப்படுத்தலாம்.
விவசாயிகள், வியாபாரிகள், நுகர்வோர் அடங்கிய 'வாட்ஸாப்' குழுக்கள் அமைத்து, விற்பனையை அதிகரிக்கலாம்.
எனவே, உழவர் சந்தைகளை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செங்கல்பட்டு மாவட்ட வேளாண் விற்பனை அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறைகள் இணைந்து, காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளிடம் நேரடியாக சென்று காய்கறிகள் வாங்கவும், சந்தைகளை மேம்படுத்தவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாய நிலங்களில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவர் சந்தையில் நாள் முழுதும் இருந்தால், விவசாய பணிகள் பாதிக்கப்படும். இதை தவிர்க்க, விவசாய நிலங்களுக்கு சென்று, விவசாயிகளிடம் காய்கறிகளை பெற்று விற்பனை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.வெங்கடேசன் மாவட்ட தலைவர், விவசாய நலச்சங்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

