/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை : ஊராட்சிகளில் அதிகாரிகள் முற்றுகையிட்டு போர்
/
செங்கையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை : ஊராட்சிகளில் அதிகாரிகள் முற்றுகையிட்டு போர்
செங்கையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை : ஊராட்சிகளில் அதிகாரிகள் முற்றுகையிட்டு போர்
செங்கையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை : ஊராட்சிகளில் அதிகாரிகள் முற்றுகையிட்டு போர்
ADDED : அக் 03, 2024 12:57 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் நீலமேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் தடுப்பு பணி ழுமுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி, வனக்குழு தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், செங்கல்பட்டில் இருந்து, சோகண்டி வழியாக, திருக்கழுக்குன்றத்திற்கு மினி பேருந்து இயக்குதல், பெரிய ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சர் பங்கேற்பு
கேளம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தலைவர் ராணி தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள், மின்னழுத்த பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயண சர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா, அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சித்தாமூர்
சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சூணாம்பேடு ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஊராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு, வேலுார் மற்றும் சின்னகளக்காடி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில், 30 ஏக்கர் புறம்போக்கு இடங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், பண்ணை குட்டைகள் அமைக்க இடம் இல்லாமல், நுாறு நாள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள புறம்போக்கு இடங்களை மீட்டு, அதில் நுாறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொளத்துார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், அடிப்படை வசதிகள் தற்போது வரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், வரவு - செலவு கணக்குகளை முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நுாறு நாள் வேலை வழங்க இடம் தேர்வு செய்வது இல்லை. இதனால், வேலை இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர் என, 1, 3, 4வது வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
செங்குன்றம்
நெடுங்குன்றம் ஊராட்சியில் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிவித்து, 12 வார்டு கவுன்சிலர்கள் கிராம சபையை புறக்கணித்தனர்.
ஊனமாஞ்சேரி ஊராட்சியில் தலைவர் மகேந்திரன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலக பற்றாளர் பிருந்தா முன்னிலையில், கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
ஊராட்சி அலுவலகம் அருகில், 46 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்கூடத்தை, உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, ஆவேசமாக குரல் எழுப்பி, தலைவரை சுற்றி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சதுரங்கப்பட்டினம்
சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில், தலைவர் ரேவதி தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில், கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் செயல்படுத்தும் திட்டத்தின்கீழ், வீடுதோறும் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.