/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செங்கல்பட்டு மாவட்டதில் அதிகரிப்பு
/
கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செங்கல்பட்டு மாவட்டதில் அதிகரிப்பு
கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செங்கல்பட்டு மாவட்டதில் அதிகரிப்பு
கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செங்கல்பட்டு மாவட்டதில் அதிகரிப்பு
ADDED : டிச 30, 2024 02:04 AM
செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் போதை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு அருகே வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாடு, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்தும், கல்வி பயின்றும் வருகின்றனர்.
மாணவ -- மாணவியர், மென்பொருள் ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா, உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருவோரை குறிவைத்து, கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
காட்டாங்கொளத்துார், பொத்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
விலை உயர்ந்த 'பைக்'குகள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேருந்தே செல்லாத கிராமங்களுக்கு கூட, கஞ்சா செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த போதை பழக்கத்திற்கு அடிமையான பலர், அதை வாங்க பண தேவைக்கு மொபைல்போன் பறிப்பு, பைக் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தொழில் போட்டி காரணமாக, அடிக்கடி புறநகரில் கொலை முயற்சி போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மற்றும் புறநகரில் 20 ஆண்டுகளுக்கு முன், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கொலைகள் நடைபெற்று வந்தன. கடந்த சில ஆண்டுகளாக, கஞ்சா விற்பனை தொடர்பாகவும் கொலைகள் நடைபெற்று வருகின்றன.
கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் சோதனை, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், சில்லறை விற்பனையில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் கஞ்சா வைத்திருப்போரே கைது செய்யப்படுகின்றனர்.
ஆந்திரா, வேலுார் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து கஞ்சா கொண்டுவந்து விற்பனை தொடர்கிறது.
கடந்த மாதம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த பராசக்தி நகரைச் சேர்ந்த இளைஞருக்கும், அஞ்சூர் கிராமத்தில் வாடகைக்கு வசித்து வரும் வடமாநில இளைஞருக்கும், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த 2022ல், பரனுார் அருகில் ரயில்வே தண்டவாளத்தில் கஞ்சா போதையில் 'ரீல்ஸ்' எடுத்த மூன்று இளைஞர்கள், மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர். அதே ஆண்டு செப்டம்பரில், தொழில்போட்டியில் பொத்தேரி பகுதியில் சந்துரு என்ற இளைஞர், பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த, கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பிரமுகரின் வீடு தாக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், போதை பழக்கத்திற்கு அடிமையானோரை மீட்டு 'கவுன்சலிங்' வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கையில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் போதை பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது. 'கூரியர், பார்சல்' வாயிலாகவும் விற்பனை நடைபெற்று வருகிறது.
வெளி மாநில நபர்கள் வாயிலாக போதை பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. காட்டாங்கொளத்துார், காவனுார், பொத்தேரி, தைலாவரம், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம், ஓட்டேரி, பெருமாட்டுநல்லுார், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகள், திம்மாவரம், பட்டரவாக்கம், அம்மணம்பாக்கம், தென்மேல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து, கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --