/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நியாய விலைக்கடை அருகே குப்பை குவிப்பதால் சீர்கேடு
/
நியாய விலைக்கடை அருகே குப்பை குவிப்பதால் சீர்கேடு
ADDED : மே 16, 2025 02:25 AM

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, சென்னை புறநகர் பகுதியில் உள்ள வளர்ந்து வரும் முக்கிய ஊராட்சி.
இந்த ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், சத்யா நகர், பாரேரி, பகத்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களும் உள்ளன.
சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அடிப்படை தேவைகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் இங்கு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் பல இடங்களில் தண்ணீர் மற்றும் கழிவு நீர் தேங்குவதாலும், முறையாக குப்பை எடுக்கப்படாததாலும், கொசு தொல்லை அதிகரித்து, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலை ஓரம் சத்யா நகர், ரயில் நிலையம் அருகில் உள்ள காலி மனை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.
பாரேரி நியாய விலைக் கடை, பராசக்தி நகர் செல்லும் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பையால், நியாய விலைக்கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், துர்நாற்றம் காரணமாக சிரமப்படுகின்றனர். குப்பையை சுழற்சி முறையில் எடுப்பதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாகவும், பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் முறையாக குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.