/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருக்க வீடில்லாத பூஞ்சேரியில் பளபளக்கும் கான்கிரீட் சாலை
/
குடியிருக்க வீடில்லாத பூஞ்சேரியில் பளபளக்கும் கான்கிரீட் சாலை
குடியிருக்க வீடில்லாத பூஞ்சேரியில் பளபளக்கும் கான்கிரீட் சாலை
குடியிருக்க வீடில்லாத பூஞ்சேரியில் பளபளக்கும் கான்கிரீட் சாலை
ADDED : அக் 23, 2024 01:21 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், நரிக்குறவர்கள், இருளர்கள் ஆகியோர் வசிக்கின்றனர். கடந்த 2021ல், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நரிக்குறவ பெண்ணிற்கு அன்னதானம் வழங்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அதே ஆண்டு தீபாவளி பண்டிகையன்று, பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு நேரடியாக சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நரிக்குறவர்கள், இருளர்கள் ஆகியோருக்கு இவலச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
இந்நிலையில், புதுச்சேரி சாலை அருகில், பாறைக்குன்று அடிவார பகுதியில், 10 இருளர் குடும்பத்தினர், வீட்டுமனை இன்றி, நீண்டகாலமாக குடிசையில் வசிக்கின்றனர். மின் இணைப்பும் இல்லை. மழையின்போது, குடிசையில் மழைநீர் பெருக்கெடுத்து அவதிக்குள்ளாகின்றனர்.
மாமல்லபுரம் பேரூராட்சியின் 10ம் வார்டாக, இப்பகுதி உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில், இந்த வார்டு, பழங்குடி பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது.
மஞ்சு என்ற இருளர் பெண்ணை, அ.தி.மு.க., பிரமுகர் போட்டியிட வைத்து, அப்பெண் வென்றார். அவரும் ஒரு குடிசையில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் இலவச வீட்டுமனை வழங்கிய இருளர் பகுதியில், தங்களுக்கும் இலவச வீட்டுமனை அளித்து, அரசு திட்ட வீடு கட்டுமாறு, இருளர்கள் வலியுறுத்தியும், வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பேரூராட்சி பிரதிநிதிகளும் அலட்சியப்படுத்துகின்றனர்.
இச்சூழலில், புதுச்சேரி சாலை பகுதியிலிருந்து, 10 இருளர் குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் பகுதிக்கு, பேரூராட்சி பிரதிநிதிகளின் சுய லாபத்திற்காக, சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
குடியிருக்க வீடு வழங்காமல், சாலை மட்டும் எதற்கு என, இருளர்கள் குமுறுகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, வீடும் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.