/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி...துவக்கம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு விமோசனம்
/
செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி...துவக்கம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு விமோசனம்
செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி...துவக்கம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு விமோசனம்
செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி...துவக்கம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு விமோசனம்
ADDED : மே 26, 2025 11:22 PM

செய்யூர் :செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள, 127 கிராமங்களில், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மூன்று கல்வி மாவட்டங்களில் செய்யூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களை உள்ளடக்கி, மதுராந்தகம் கல்வி மாவட்டம் செயல்படுகிறது.
மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில், ஆண்டுக்கு 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் பிளஸ் - 2 முடித்து, கல்லுாரிக்குச் செல்கின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக செய்யூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இல்லாததால் மாணவ - மாணவியர் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
கிராமத்தில் இருந்து கல்லுாரிக்காக நீண்ட துாரம் பயணம் செய்யும் சூழல் இருந்ததால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களின் அறியாமையால், ஏராளமான மாணவ - மாணவியரின் கல்லுாரி படிப்பு எட்டாக்கனியாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 14ம் தேதி நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், செய்யூரில் புதிய அரசு கலைக் கல்லுாரி அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, கல்லுாரி அமைக்க செய்யூர் - போளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள, அரசுக்குச் சொந்தமான 7 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ் - 2 முடித்த மாணவ - மாணவியர் கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதில், செய்யூர் அரசு மற்றும் கலைக் கல்லுாரிக்கு இந்த கல்வி ஆண்டிற்காக, ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப்பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தற்போது வரை, 6,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
செய்யூரில் புதிய கல்லுாரி கட்டடம் அமைக்கும் வரை, செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள இரண்டு அடுக்குகளுடன் கூடிய, ஒன்பது வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில், இந்தாண்டு தற்காலிகமாக கல்லுாரி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லுாரி மாணவர்களின் வசதிக்காக சிமென்ட் கல் சாலை, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக செயல்பட உள்ள, செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, நேற்று காலை 11:30 மணியளவில், தமிழக முதல்வர் ஸ்டாலின்,'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் போது செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ரம்யா, மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் மலர், செய்யூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இதற்கு முன், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லுாரி இல்லாததால், செங்கல்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லுாரிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், கூடுதல் கல்விக் கட்டணம், போக்குவரத்து செலவு, நேர விரயம் ஏற்பட்டது. தற்போது செய்யூர் பகுதியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்பட்டு இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் காலங்களில், செய்யூர் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ - மாணவியர் கல்லுாரி படிக்க பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பிளஸ் - 2 பொதுத் தேர்வில், 500க்கு 455 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். இளங்கலையில் பி.ஏ., வரலாறு படிப்பதில் விருப்பம். கல்லுாரிக்கு சென்று வர எளிதாக இருக்கும் என்பதால், தற்போது புதிதாக துவங்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விண்ணப்பித்துள்ளேன். 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
-நோ.சக்திவேல்,
சூணாம்பேடு.
பல ஆண்டுகள் கோரிக்கையாக, செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டு, 270 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை, 'ஆன்லைன்' வாயிலாக 5,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர்கள் 'கவுன்சிலிங்' மற்றும் சேர்க்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
- மாதவன்,
கல்லுாரி முதல்வர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, செய்யூர்.