/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
/
இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
ADDED : டிச 10, 2025 08:27 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, விபத்தில் உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால், அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன், 35.
இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் பகுதியில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதற்கு இழப்பீடு கோரி, வாசுதேவனின் மனைவி பிரேமா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, மதுராந்தகம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வாசுதேவன் குடும்பத்திற்கு அரசு பேருந்து சார்பாக,
35 லட்சத்து 35 ஆயிரத்து 422 ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி இழப்பீடு வழங்காததால், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று, மதுராந்தகம் சார்பு நீதிமன்ற உத்தரவின்படி, மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் நின்ற, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தில், நீதிமன்ற பணியாளர்கள் 'ஜப்தி' நோட்டிசை ஒட்டி, அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

