/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்
/
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்
ADDED : அக் 31, 2025 10:19 PM
செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, 359 ஊராட்சிகளில் இன்று, கிராம சபை கூட்டம் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், காட்டாங்கொளத்துார், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், பரங்கிமலை, மதுராந்தகம் மற்றும் லத்துார் என, 8 ஊராட்சி ஒன்றியங்களாக செயல்படுகின்றன.
இதில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், இன்று காலை கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது.
கூட்டத்தை மேற்பார்வையிட, ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், துாய்மை பாரத இயக்கம், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை ஆன்லைனில் செலுத்தும் முறை குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
விழிப்புணர்வு
ஊராட்சிப் பகுதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, 'போதையில்லா தமிழகம்' உருவாக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனநலம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊக்குநர் பிரதிநிதிகள் ஆகியோருக்கு பாலின விழிப்புணர்வு ஆகிய பயிற்சிகள், அரசு சார்பில் அளிக்கப்பட உள்ளது குறித்து, கிராம சபையில் விளக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த ஏப்., 1ம் தேதி முதல், தற்போது வரை, 2025 - 26ல், பொது நிதியில் செயல்படுத்திய பணிகள் செலவு, கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெறுவது, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், கிராம சபையில் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

