/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., புறவழிச்சாலை மேம்பாலம் நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்
/
ஜி.எஸ்.டி., புறவழிச்சாலை மேம்பாலம் நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்
ஜி.எஸ்.டி., புறவழிச்சாலை மேம்பாலம் நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்
ஜி.எஸ்.டி., புறவழிச்சாலை மேம்பாலம் நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்
ADDED : பிப் 09, 2024 10:21 PM
பல்லாவரம்:பல்லாவரம் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பல்லாவரம்- மேம்பாலம் -- புறவழிச்சாலையை இணைக்கும் வகையிலான உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு, நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது.
பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் பான்ட்ஸ் சிக்னலில் இருந்து, திருநீர்மலை சாலை பிரிந்து செல்கிறது. இதையொட்டி, தோல் தொழிற்சாலைகள் கொண்ட நாகல்கேணி, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
மேலும் இச்சாலை, சென்னை புறவழி மற்றும் வெளிவட்ட சாலைகளையும் இணைக்கிறது. இதனால் கனரக வாகனங்கள், லாரி, வேன், ஆட்டோ என, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதன் காரணமாக, 'பீக் - ஹவர்' நேரத்தில், மூச்சு முட்டும் அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது.
எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து சென்னை புறவழிச்சாலையை இணைக்கும் வகையில், 3.5 கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, சட்டசபையில் தொடர்ந்து பேசி வந்தார்.
இதற்கு,'பல்லாவரம் மேம்பாலம் முதல் புறவழிச்சாலை வரை, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இதையடுத்து, முதல் கட்டமாக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் நடந்தது.
இதைத்தொடர்ந்து, நிலம் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
சில மாதங்களில் இப்பணி முடிந்து, நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரி அதன் பின் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
இம்மேம்பாலம் கட்ட, 400 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து நேரடியாக மேம்பாலம் கட்டி, புறவழிச்சாலை யுடன் இணைத்தால், 'பீக்-ஹவர்' நேரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் குறையும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள், நெரிசலில் சிக்காமல், தென் மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகாவிற்கும் செல்ல இம்மேம்பாலம் உதவியாக இருக்கும். இம்மேம்பாலத்தை கொண்டு வருவதில், அமைச்சர் எ.வ.வேலு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
-- இ.கருணாநிதி,
பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,