/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் தொடரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள்
/
ஜி.எஸ்.டி., சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் தொடரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள்
ஜி.எஸ்.டி., சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் தொடரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள்
ஜி.எஸ்.டி., சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் தொடரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள்
ADDED : ஜன 31, 2024 10:46 PM

மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்துார் -- செட்டிப்புண்ணியம் வரை, ஆறுவழிச் சாலையாக இருந்தது. அப்போது, இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமானதால், அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, எட்டு வழிச்சாலை அமைக்கும் பணி, கடந்த 2018ம் ஆண்டு பெருங்களத்துார் -- வண்டலுார் வரையிலும், 2019ம் ஆண்டு வண்டலுார் --கூடுவாஞ்சேரி வரையிலும் நடந்து முடிந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கூடுவாஞ்சேரி செட்டிப்புண்ணியம் வரை, சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
சாலை விரிவாக்கம் நடந்த பகுதிகளில், தற்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், இளநீர் கடைகள், பிரபல கருப்பட்டி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்ட ஏராளமாக உள்ளன.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில் பஜார் வீதிகளில் உள்ள கடைகளுக்கு, பார்க்கிங் இல்லாததால், கடைகளுக்கு வருவோர் சாலையிலேயே தங்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. மேலும், கடைகளின் உரிமையாளர்கள் தங்களின் கடைகளின் பெயர் பலகைகளை சாலையிலேயே வைத்து விளம்பரப்படுத்துகின்றனர்.
நெடுஞ்சாலை முழுதும் உள்ள சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தொழிற்சாலை பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் இரவும் பகலும் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் தீபாவளி, பொங்கல் மட்டுமின்றி, மாதந்தோறும் முக்கிய போலீஸ் அதிகாரிகளை தனியாக, 'கவனித்து' விடுவதால், அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சாலையில் எந்த பகுதியிலும், விளக்குகள், சிக்னல்கள் முறையாக இயங்குவதில்லை. சாலை ஆக்கிரமிப்பு காரணமாக, அடிக்கடி விபத்துகள் நடந்து, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் பகுதியில், முறையாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். மேலும், பேருந்து நிறுத்தங்களிலும் வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளதால், மாணவர்கள், முதியோர் பேருந்தில் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கணேஷ்,
சிங்கபெருமாள் கோவில்.