/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா பொருட்கள் விற்பனை: செங்கை மாவட்டத்தில் ஜோர்
/
குட்கா பொருட்கள் விற்பனை: செங்கை மாவட்டத்தில் ஜோர்
குட்கா பொருட்கள் விற்பனை: செங்கை மாவட்டத்தில் ஜோர்
குட்கா பொருட்கள் விற்பனை: செங்கை மாவட்டத்தில் ஜோர்
ADDED : ஜூலை 15, 2025 12:16 AM
மறைமலை நகர், செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில், குட்கா பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு நகருக்கு தினமும், சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு, 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள், இரண்டு கலை கல்லுாரிகள், அரசு ஐ.டி.ஐ., உள்ளிட்ட கல்வி நிலையங்கள் உள்ளன.
மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கி, சுற்றியுள்ள பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் புறநகரில், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருவது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில், புதிதாக வந்து கேட்பவர்களுக்கு 'ஹான்ஸ், குட்கா, கூல் லிப்' பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை; வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இரண்டு மடங்கு கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், குட்கா பொருட்களை மொத்தமாக கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யாமல், கடைக்காரர்கள் சிறிது சிறிதாக பதுக்கி வைத்துள்ள இடங்களில் இருந்து எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது, காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிந்து, கடைகளுக்கு 'சீல்' வைப்பு, அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், மொத்த விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கடந்த மே மாதம், பாலுார் காவல் நிலைய எல்லையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட, 500 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜூனில், மதுராந்தகம் அடுத்த ஒரத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முன்னக்குளம் கிராமத்தில், மளிகை கடையில் 300 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.
கடந்த 2ம் தேதி, செங்கல்பட்டு அண்ணா சாலையில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து, 114 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருவது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.