/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அவசரமாக போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து அரசு பணம் வீண்
/
அவசரமாக போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து அரசு பணம் வீண்
அவசரமாக போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து அரசு பணம் வீண்
அவசரமாக போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து அரசு பணம் வீண்
ADDED : ஏப் 03, 2025 02:17 AM

அச்சிறுபாக்கம்:எலப்பாக்கம் -- ஆனைக்குன்னம் இடையே சீரமைக்கப்பட்ட தார்ச்சாலை, மிகவும் சேதமடைந்து உள்ளதால், மீண்டும் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
எலப்பாக்கத்தில் இருந்து ஆனைக்குன்னம் வழியாக ஒரத்தி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
அதில், எலப்பாக்கம் -- ஆனைக்குன்னம் இடையே உள்ள 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை மிகவும் சேதமடைந்து, வாகனங்கள் பயன்படுத்த முடியாதவாறு குண்டும் குழியுமாக இருந்தது.
அதனால், கடந்த சில நாட்களுக்கு முன், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், எலப்பாக்கம் - -ஆனைக்குன்னம் இடையே சாலை சீரமைக்கும் பணி, அவசரமாக நடந்தது.
தற்போது, சீரமைக்கப்பட்ட சாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு, பள்ளங்கள் உருவாகியுள்ளன.
பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட தார்ச்சாலையில், மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கலெக்டர் உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆனைக்குன்னம் சமூக ஆர்வலர் ரவி, 50, என்பவர் கூறியதாவது:
எலப்பாக்கம் -- ஆனைக்குன்னம் இடையே தார்ச்சாலை சீரமைக்கும் பணி அவசரமாக நடந்தது.
ஆண்டு இறுதி கணக்கு முடிப்பதற்காக, துரித வேகத்தில் சாலையை அமைத்துள்ளனர்.
அதனால், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மீண்டும் பள்ளங்கள் உருவாகியுள்ளன.
அதேபோன்று, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரத்தி -- திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில், அனந்தமங்கலம் சிவன் கோவில் அருகே, நன்றாக இருந்த சாலை மீது, மீண்டும் தார்ச்சாலை அமைத்துள்ளனர். அதனால், அரசு பணம் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி மார்ச் மாதக் கணக்கு முடிப்பதற்காக, ஒப்பந்ததாரர் பயன்பெறும் வகையில், தேவையற்ற இடங்களில் தரமற்ற முறையில் சாலையை அமைத்துள்ளனர்.
கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எலப்பாக்கம் -- ஆனைக்குன்னம் இடையே சாலை சீரமைக்கப்பட்டது. அதிகபாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால், ஒரு சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவை, விரைந்து சீரமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

