/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நரசிம்ம பெருமாள் கோவில் இடத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
/
நரசிம்ம பெருமாள் கோவில் இடத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
நரசிம்ம பெருமாள் கோவில் இடத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
நரசிம்ம பெருமாள் கோவில் இடத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 05, 2025 02:09 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நுாற்றுக் கணக்கான வணிக கடைகள் உள்ளன.
இந்த ஊராட்சி, புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சிகளில் ஒன்றாக உள்ளது.
இங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, அனுமந்தபுரம் சாலையில் உள்ள திடக்கழிவு தரம் பிரிக்கும் மையத்தில், இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, இங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அங்கு மீதமிருந்த குப்பை, கொளத்துார் ஊராட்சிக்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பின் சேகரிக்கப்படும் குப்பை, கொளத்துார் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
தற்போது, சிங்க பெருமாள் கோவில் பகுதியில் வசிப்போர், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான காலி இடத்தில், குப்பை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் கொட்டப்படும் குப்பையை பன்றி, மாடுகள் கிளறுகின்றன.
துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் பாரேரி, பராசக்தி நகர் மக்கள் அவதியடைகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம், காலி மைதானமாக உள்ளது.
இந்த இடத்தில் வார நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விளையாடி வந்தனர். இங்கு வேறு மைதானம் இல்லாததால், இதை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த இடமும் குப்பை கொட்டப்பட்டு, வீணாகி வருகிறது. இதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.