/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் மடிப்பாக்கம் பஜாரில் கடும் நெரிசல்
/
சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் மடிப்பாக்கம் பஜாரில் கடும் நெரிசல்
சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் மடிப்பாக்கம் பஜாரில் கடும் நெரிசல்
சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் மடிப்பாக்கம் பஜாரில் கடும் நெரிசல்
ADDED : நவ 25, 2024 01:55 AM

வேளச்சேரி - - தாம்பரம் சாலையில் இருந்து பரங்கிமலை - மேடவாக்கம் பிரதான சாலைக்கு செல்ல வழித்தடம் உள்ளது. இது, பஜார் சாலை, மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் சபரி சாலை வழியாக செல்கிறது.
தாம்பரம், மேடவாக்கம் கூட்டுச்சாலை, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளச்சேரி, சைதாப்பேட்டை, பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், மேற்கண்ட சாலை வழியாக மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன.
எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மீடியன் வசதியுடன் கூடிய நான்கு வழிப்பாதையாக மாற்ற, 15 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.
நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கைவேலி கூட்டுச்சாலையில் இருந்து பாலையா கார்டன் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், சில இடங்களில், மீடியன் அமைக்காமல், முழுதான விரிவாக்கம் செய்யப்படாமல், சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, பஜார் சாலையில் குறிப்பிட்ட பகுதியில் பிரம்மாண்ட உணவகம், டாஸ்மாக் கடை, தனியார் பயிற்சி நிலையம், காஸ் நிரப்பும் பங்க் உள்ளிட்டவை அடுத்தடுத்து செயல்படுகின்றன.
இவற்றுக்கு வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, காஸ் நிரப்பும் நிலையத்திற்கு வரும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், காலை, மாலை என இரு வேளையிலும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
உணவு விடுதிக்கு வரும் டேங்கர் லாரிகள், சாலையில் நிறுத்தி தான் தண்ணீரை வினியோகம் செய்கின்றன.
மாலையில் 'குடி'மகன்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் தினமும் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையில் ஏற்படும் நெரிசலைத் தடுக்க, போக்குவரத்து போலீசார் தனிகவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
-- நமது நிருபர் --