/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹெலிகாப்டர் சுற்றுலா கோவளத்தில் சேவை
/
ஹெலிகாப்டர் சுற்றுலா கோவளத்தில் சேவை
ADDED : ஜன 11, 2025 02:00 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் இ.சி.ஆர்., சந்திப்பு சாலை அருகே, கம்போடியா நாட்டைச் சேர்ந்த 'ஏரோடான் சாப்பர்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டின் கீழ், ஹெலிகாப்டர் மையம் அமைக்கப்பட்டு இயங்குகிறது.
கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணியரை ஏற்றிச் சென்று கோவளம், மாமல்லபுரம், முட்டுக்காடு கடற்கரை பரப்புகள் ஆகியவற்றை சுற்றிக்காட்டும் சேவையை, இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் சுற்றுலாவை வளர்க்கவும், வெளிநாட்டு பயணியரை ஈர்க்கவும், அதன் வழியாக கிழக்கு கடற்கரை பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், நவீன சுற்றுலாத் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஹெலிகாப்டரில், 6 பேர் மட்டும் பயணிக்க முடியும். 5 நிமிட பயணத்திற்கு ஒரு நபருக்கு 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாதத்தில் மூன்று நாட்கள் செயல்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
பயணியரின் எடை பரிசோதனை, பாதுகாப்பு அறிவுரைகள் போன்ற வழிமுறைகளுக்கு பின், பயணம் துவங்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் 1,000 மீட்டர் உயரம் வரை பறக்கிறது. காலநிலை சூழல் சரியில்லை என்றால் பயணம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
நேற்று, 50க்கும் மேற்பட்டோர் இணையவழியில் முன்பதிவு செய்து, ஹெலிகாப்டரில் பயணிக்க வந்திருந்தனர்.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள், உடன் வந்தவர்கள் புகைப்படம், 'செல்பி' எடுத்தும், பயணித்தும் மகிழ்ந்தனர்.
அதேபோல், கட்டணம் அடிப்படையில், ஹெலிகாப்டர் மையத்தில், ஹெலிகாப்டர் வசதியுடன் 'ஏரோ டான்' என்ற திறந்தவெளி திருமண அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் மணமக்கள் வந்திறங்கி விழா மேடைக்குச் சென்று திருமண விழாவை நடத்தும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விழா, கூட்டம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

