/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைஉச்சகட்ட உஷார்!:அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்;ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
/
புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைஉச்சகட்ட உஷார்!:அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்;ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைஉச்சகட்ட உஷார்!:அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்;ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைஉச்சகட்ட உஷார்!:அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்;ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
UPDATED : நவ 30, 2024 01:43 AM
ADDED : நவ 30, 2024 12:54 AM

இன்று கரைகடக்க உள்ள புயல், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். அச்சறுத்தல் ஏற்படுத்தி வரும் விளம்பர பதாகைகள், கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையின் பிரதான சாலைகளான ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மிதமான தொடர் மழை பெய்து வருகிறது. இன்று, 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், 20 செ.மீ.,க்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
புயல், மழை பாதிப்புகளை தடுக்க, பல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பலத்த காற்று வீசும் என்பதால், சென்னை முழுதும் உயிர்பலி கேட்டு அச்சறுத்தி வரும் விளம்பர பதாகைகள், அதை தாங்கும் சட்டகம், கடைகளின் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பதாகைகளை, நேற்று காலை முதல் ரோந்து பணிக்கும் செல்லும் அந்தந்த பகுதி போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கன மழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில், மக்களை மீட்பதற்கான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று முதல் வரும் டிச., 1ம் தேதி வரை, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், கன மற்றும் மிக கனமழை பெய்ய உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாவட்டத்தில், வெள்ள நீரால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளாக, 390 பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள, பொதுமக்களை மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 15 மண்டல அலுவலர்களை கொண்ட, 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
துணை கலெக்டர் நிலையில், வட்ட அளவிலான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும், வெள்ள தடுப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்க, 4,500 தன்னார்வலர்கள், மாவட்ட, கோட்ட மற்றும் வட்டார அளவில் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலோர பகுதிகளில் வசித்துவரும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் TN Alert செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக இயற்கை இடர்பாடுகள் குறித்த முன்னெச்சரிக்கை செய்திகளை அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் குழு -