/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றில் உயர்மட்ட பாலப்பணி விறுவிறு
/
பாலாற்றில் உயர்மட்ட பாலப்பணி விறுவிறு
ADDED : நவ 10, 2025 01:05 AM

திருக்கழுக்குன்றம்: இரும்புலிச்சேரி பாலாற்றில் உயர்மட்ட பால கட்டுமானப் பணி விறுவிறுவென நடக்கிறது.
திருக்கழுக்குன்றம் அடுத்த, இரும்புலிச்சேரி ஊராட்சி பகுதியில் இருந்து, நெரும்பூர் - புதுப்பட்டினம் சாலைக்கு செல்லும் சாலையில் பாலாறு கடக்கிறது.
இப்பகுதி மக்கள் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு, ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்தே, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, செல்லவேண்டும்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் பலமிழந்து, கடந்த 2015 வெள்ளப்பெருக்கில் இடிந்தது.
போக்குவரத்து கருதி, பழைய பாலத்தில் இருந்து, 1 கி.மீ., கிழக்கில், வீராணம் குடிநீர் திட்ட கான்கிரீட் குழாய்களுடன், தற்காலிக மண்பாதை அமைக்கப்பட்டது.
இப்பாதையும் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்படுவது வழக்கம். இதனால், எடையாத்துார் - பாண்டூர் உயர்மட்ட பாலம் வழியே, 5 கி.மீ., சுற்றிச் செல்வதால் தங்கள் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்குமாறு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
அரசு பரிசீலித்து, 46 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், பூமி பூஜையுடன் பணி துவக்கப்பட்டது. பழைய பாலத்தை முற்றிலும் அகற்றி, அதே இடத்தில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.
புதிய பாலம், 644 மீட்டர் நீளம், 10 மீ., அகலம், 23 அடி உயரம் அளவில், 22 துாண்களுடன் கட்டப்படுகிறது.
தற்போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து, கான்கிரீட் துாண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் பாலமும் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
இன்னும் சில மாதங்களில் பாலத்தை கட்டி முடிப்பதாக ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

