/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகரில் நாளுக்கு நாள் வீடு வாடகை உயர்வு குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல்
/
புறநகரில் நாளுக்கு நாள் வீடு வாடகை உயர்வு குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல்
புறநகரில் நாளுக்கு நாள் வீடு வாடகை உயர்வு குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல்
புறநகரில் நாளுக்கு நாள் வீடு வாடகை உயர்வு குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல்
ADDED : ஏப் 11, 2025 10:45 PM
மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்ட புறநகர் பகுதிகளில் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், ஊரப்பாக்கம், வண்டலுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
இந்த பகுதிகளில், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து, பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர்.
இவர்கள் மறைமலைநகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் இதுபோன்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் இந்த பகுதிகளில் வாடகைக்கு குடியேறுவது அதிகரித்து வருவதால், சொந்த வீடு வைத்திருப்போர் கவனம் இவர்களை நோக்கி திரும்பி உள்ளது.
இதன் காரணமான, வீடுகளின் வாடகையை உரிமையாளர்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளனர்.
இதனால், வாடகை வீடுகளில் வசித்து வருவோர் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, வாடகை வீட்டில் வசிப்போர் கூறியதாவது:
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், நாளுக்கு நாள் வீட்டு வாடகை அதிகரித்து வருகிறது. சமையல் அறை, ஒரு படுக்கை அறை, வரவேற்பறை கொண்ட வீடுகளுக்கு இதற்கு முன், 4,000 முதல் -7,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட்டது.
தற்போது இளைஞர்கள் வீடு தேடிச் செல்லும் போது, ஒருவருக்கு 1,000 முதல்- 2,000 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு வீட்டை எட்டு பேருக்கு வரை வாடகைக்கு விடுகின்றனர்.
புதிதாக வீடு கட்டுவோரும், 'பேச்சுலர்'களை குறி வைத்தே வீடு கட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக, குடும்பமாக வசித்து வருவோருக்கு வீடுகள் கிடைக்காமல், பெரும் தொகையை வாடகைக்கு செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மேலும், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்தோர் குறித்து எந்த விபரங்களும் விசாரிக்காமல், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட்டு வருகின்றனர்.
வாடகை விடும் போது வீட்டின் உரிமையாளர்கள், போலீசார் கூறும் எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக வழிப்பறி, திருட்டு உள்ளிட்டவை புறநகர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.
எனவே, வீடுகளுக்கு சரியான வாடகை தொகை நிர்ணயம் செய்து, வழிகாட்டி நெறிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்போர் அதிக அளவில் உள்ளனர். வீட்டின் உரிமையாளர்களிடம் வாடகைக்கு விடும் போது, அவர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வாங்கி வைக்க அறிவுறுத்தி உள்ளோம்.
பெரும்பாலானோர் இதை பின்பற்றுவது இல்லை. கடந்தாண்டு மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் வங்கதேச இளைஞர்கள் இருவர், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செயின் பறிப்பு, பைக் மற்றும் மொபைல் போன் திருட்டு சம்பவங்களில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
எனவே வீட்டின் உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வீடு உரிமையாளர்கள் கூறியதாவது:
'பேச்சுலர்'களுக்கு வீடு வாடகைக்கு விடும் போது, அவர்கள் பெரும்பாலான நேரம் கம்பெனி அல்லது பொழுதுபோக்க சென்று விடுகின்றனர். இரவில் துாங்க மட்டுமே வீட்டிற்கு வருகின்றனர். இதன் காரணமாக வீடு பராமரிப்பது சுலபமாக உள்ளது. இதுவே குடும்பத்தினருக்கு வாடகைக்கு விடும் போது தண்ணீர், கழிவுநீர், அக்கம்பக்கத்தினர் பிரச்னை உள்ளிட்ட பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புறநகரில் நாளுக்கு நாள் வாடகை உயர்வு என்பது, வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. வெளியூர் இளைஞர்களும் 15,000 சம்பளத்திற்கு இங்கு பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தருகின்றனர் எனக்கூறி குடும்பத்தினரிடமும் அதிக வாடகை கேட்கின்றனர். எனவே, சிக்காட் பகுதியில் தொழிலாளர்கள் தங்குவதற்கு கூடுதலாக விடுதிகள் அமைக்க, அரசு முன்வர வேண்டும். அதே போல, வாடகை நிர்ணயம் செய்ய, மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ப.ஆனந்தன், சிங்கபெருமாள் கோவில்.