/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வளர்குன்றம் ஏரியிலிருந்து நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண்... கொள்ளை அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
/
வளர்குன்றம் ஏரியிலிருந்து நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண்... கொள்ளை அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
வளர்குன்றம் ஏரியிலிருந்து நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண்... கொள்ளை அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
வளர்குன்றம் ஏரியிலிருந்து நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண்... கொள்ளை அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
ADDED : ஏப் 29, 2025 09:58 PM

செங்கல்பட்டு :திருப்போரூர் அருகே, வளர்குன்றம் ஏரியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில், விதிகளை மீறி மண் மற்றும் சவுடு மண் அள்ளப்படுகிறது. வருவாய், நீர் வளம், கனிம வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் உள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், வளர்குன்றம் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி, பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீர் வளர்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு, பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏரியின் நீரால், சுற்றியுள்ள ஆழ்துளைக் கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து, இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக இருந்தது.
வளர்குன்றம் கிராமத்தின் குடிநீர் தேவைக்கு, இந்த ஏரியில் பொது கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மண் மற்றும் சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இந்தாண்டில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக அளவில் மண் எடுக்கப்பட்டு, கேளம்பாக்கம் அருகில் ஆறு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக தினமும், நுாற்றுக்கணக்கான லாரிகள் வளர்குன்றம் ஏரிக்கு வந்து, மண் எடுத்துச் செல்கின்றன. இதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான ஆழத்திற்கு தோண்டி மண் கொள்ளை நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும், சாலை விரிவாக்க பணிகளுக்கு மட்டுமின்றி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், தனி நபர்களுக்கும் ஜோராக மண் 'சப்ளை' நடைபெற்று வருகிறது.
இந்த ஏரியிலிருந்து எடுக்கப்படும் மண் ஒரு லோடு, 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த முறைகேடால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, வருவாய், கனிமவளத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், இங்கு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அதிகாலை முதல் மாலை 6:30 வரை, தொடர்ந்து வளர்குன்றம் ஏரியில் இருந்து மண் அள்ளப்படுகிறது. ஏரி முழுதும் பரவலாக, 3 அடி முதல் 5 அடி ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்ற விதிகளை மீறி, மண் கொள்ளை நடைபெற்று வருகிறது.
தனி நபர்கள் சிலரின் சுய லாபத்திற்காக, ஏரி மண்ணை சூறையாடி வருகின்றனர்.
இதன் காரணமாக, வரும் காலங்களில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. தற்போதே, ஏரி மதகு வழியாக தண்ணீர் செல்லாததால், கடந்தாண்டு ஏரியில் மண் எடுத்த பள்ளத்தில் மோட்டார் அமைத்து, வயலுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இதை கண்காணிக்க வேண்டிய வருவாய், நீர்வளம், கனிம வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மண் எடுக்க அனுமதி வழங்கும் ஏரிகளை, முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வளர்குன்றம் ஏரியில் இருந்து மண் ஏற்றிச்செல்லும் 'டாரஸ்' லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால் செங்கல்பட்டு - -திருப்போரூர் சாலையில் பல இடங்களில் மண் பரவி உள்ளது. கடந்த வாரம் மண் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, முள்ளிப்பாக்கம் கூட்டுச் சாலையில் பழுதடைந்தது. லாரியில் இருந்த மண்ணை சாலையிலேயே கொட்டிவிட்டுச் சென்றனர். மாலை நேரம் என்பதால், சாலையில் மண் கொட்டி இருந்தது தெரியாமல், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மண் குவியலில் மோதி, கீழே விழுந்து காயமடைந்தார். அதன் பின், கிராம மக்களே சாலையில் இருந்த மண்ணை அகற்றினர்.
- ப.மணிகண்டன்,
செங்கல்பட்டு.