/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுார் காவல் நிலைய எல்லையில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
/
பாலுார் காவல் நிலைய எல்லையில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
பாலுார் காவல் நிலைய எல்லையில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
பாலுார் காவல் நிலைய எல்லையில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
ADDED : ஏப் 13, 2025 08:31 PM
சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு அடுத்த பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலுார், ரெட்டிபாளையம், ஆப்பூர், வெங்கடாபுரம், கொளத்துார் உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு உட்பட்டு, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம மக்களில் கணிசமானோர் விவசாயமும், மற்றவர்கள் ஒரகடம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஆப்பூர், தெள்ளிமேடு, வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, இரவில் பொதுமக்களைத் தாக்கி பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் ஆப்பூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பழைய குற்றவாளி, போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
தொடர்ந்து, கடந்த 9ம் தேதி அதே வனப்பகுதியில் பதுங்கி இருந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற தொடர் சம்பவங்களால், சுற்றியுள்ள கிராமத்தினர் அச்சமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில், கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெங்கடாபுரம், தெள்ளிமேடு பகுதிகளில், சீமை கருவேல மரங்கள் உள்ள பகுதியில், கோவிலுக்கு அருகில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
வெளியூரைச் சேர்ந்தவர்கள் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தொடர்கிறது.
அதே போல பாலுார், வெங்கடாபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதிகளில், வீட்டிற்கு அருகில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் குறிவைத்து திருடப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் குருவன்மேடு கிராமத்தில், வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
கடந்த 6ம் தேதி ஆப்பூர் கிராமத்தில், ஆட்கள் உள்ள வீட்டின் கதவை உடைத்து, 35 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த மூன்று மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக வாலிபர் அடித்துக் கொலை, சிறுமிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், சில பகுதிகளில் மட்டும் கடமைக்கு ரோந்து சென்று வருகின்றனர்.
தெள்ளிமேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச்சாவடி நின்று, வேலை முடிந்ததும் கொளத்துார் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் கூலித் தொழிலாளி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் குறியாக உள்ளனர்.
அல்லது கிராமத்திற்கு அருகில் உள்ள காலி வீட்டுமனை பிரிவுகளில் மது அருந்துவோரை நெடுஞ்சாலை வரை அழைத்துச் சென்று, மது போதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி அபராதம் விதிக்கின்றனர்.
இதை விடுத்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் தெள்ளிமேடு, வெங்கடாபுரம், பாலுார் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.