/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் ராட்சத பேனர்கள் அதிகரிப்பு ...அடங்காத கலாசாரம் : 'வசூல்' நன்றாக இருப்பதால் அதிகாரிகள் மவுனம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் ராட்சத பேனர்கள் அதிகரிப்பு ...அடங்காத கலாசாரம் : 'வசூல்' நன்றாக இருப்பதால் அதிகாரிகள் மவுனம்
ஜி.எஸ்.டி., சாலையில் ராட்சத பேனர்கள் அதிகரிப்பு ...அடங்காத கலாசாரம் : 'வசூல்' நன்றாக இருப்பதால் அதிகாரிகள் மவுனம்
ஜி.எஸ்.டி., சாலையில் ராட்சத பேனர்கள் அதிகரிப்பு ...அடங்காத கலாசாரம் : 'வசூல்' நன்றாக இருப்பதால் அதிகாரிகள் மவுனம்
UPDATED : அக் 30, 2025 10:00 PM
ADDED : அக் 30, 2025 09:58 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், கட்டடங்களின் மேலே அமைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர்கள் மழை, காற்றில் சரிந்து விழுந்து, விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளன. மேலும், இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதால், தினமும் விபத்துகள் அரங்கேறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு -- பெருங்களத்துார் இடையிலான 30 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
![]() |
போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலுார் உயிரியல் பூங்கா, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் நிறைந்து உள்ளன.
இந்நிலையில், இந்த சாலையில் இரு பக்கங்களிலும் உள்ள கட்டடங்களின் மேல், பல டன் எடையுள்ள, 200க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பர பேனர் களால் கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்கள் மீது மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும், பெரும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் மாதந்தோறும் நடக்கிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால், விளம்பர பேனர்கள் நீரில் நனைந்து கிழிந்து, காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து, உயிர்பலி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், வானிலை மாற்றத்தால் உருவாகும் மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியால் புயல் உருவாகி, காற்று பலமாக வீசும் போது, இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து, வாகன ஓட்டிகள் மீது விழ அதிக வாய்ப்புள்ளது. பேனர்கள், போஸ்டர்கள் வைக்க கூடாது என, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன.
ஆனால், நல்ல, 'வசூல்' உள்ளதால் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, எந்த நேரத்திலும் அசம்பாவிதம் தரக்கூடிய, ஆபத்தான இந்த விளம்பர பேனர்களை முற்றிலும் அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

