/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயர்த்தி அமைக்க வலியுறுத்தல்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயர்த்தி அமைக்க வலியுறுத்தல்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயர்த்தி அமைக்க வலியுறுத்தல்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயர்த்தி அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 02:02 AM

அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் அருகே, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்கு, பெரும்பேர் கண்டிகை துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின்னல், கீழ் மின்னல் காலனி பகுதியில், தொழுப்பேடு -- ஒரத்தி மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
அந்த சாலை ஓரம் மின்கம்பம் அமைத்து, வீட்டு மின் இணைப்பு மற்றும் விவசாய இணைப்புகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதில், கிராமத்திற்குச் செல்லும் சாலை பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்ந்து, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
தற்போது, நெல் அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருவதால், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை டிராக்டர் வாகனத்தில், கொள்முதல் நிலையங்களுக்கு இவ்வழியாக கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது.
மேலும், இங்குள்ள மினி குடிநீர் டேங்க் அருகே, மின் கம்பிகள் மிகவும் தாழ்ந்து செல்கின்றன.
தற்போது, வைக்கோல் கட்டுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், வாகனத்தின் மீது உரசி விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில், மாற்றுப் பாதை வழியாக கடந்து செல்கின்றன.
தாழ்ந்த மின்கம்பிகளை, புதிதாக மின்கம்பம் அமைத்து சீரமைக்க கோரி, பெரும்பேர் கண்டிகை மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மின் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் கம்பிகளை உயர்த்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.