/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறவழிச்சாலை புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
/
புறவழிச்சாலை புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
புறவழிச்சாலை புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
புறவழிச்சாலை புறக்காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 10, 2025 12:46 PM
ADDED : ஜூலை 10, 2025 01:37 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள புறவழிச்சாலை புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலையின் இருபுறமும், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நின்று, பயணியரை இறக்கியும், ஏற்றியும் செல்கின்றன.
இதனால், பயணியரின் பாதுகாப்பு மற்றும் திருட்டு சம்பவம், ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென, மாவட்ட எஸ்.பி.,யிடம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க, மகேந்திரா வேர்ல்டு சிட்டி தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற அந்த நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ், சில ஆண்டுகளுக்கு முன், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்தது.
இந்த புறக்காவல் நிலையத்தில் துவக்கத்தில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக திருட்டு மற்றும் ரவுடிகள் நடமாட்டம் குறையத் துவங்கியது.
கடந்த சில மாதங்களாக, புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபடுவதில்லை.
இதனால், புறவழிச்சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இரவு நேரங்களில் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் போது, மர்ம நபர்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், புறக்காவல் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்படி, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.