/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம்
/
மறைமலை நகர் நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம்
மறைமலை நகர் நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம்
மறைமலை நகர் நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம்
ADDED : பிப் 12, 2024 12:26 AM

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவை செலுத்தப்படாமல், 30.15 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, நகராட்சி அடிப்படை வசதிகள் தாமதமாவதால், நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தலைமையில், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் இணைந்து, நகராட்சிக்கு வர வேண்டிய நடப்பாண்டு நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பணியில், கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரடி வரி வசூலில், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 1.21 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்த 1,144 கட்டடங்களுக்கு வரி விதிக்கப்பட்ட வகையில், 7.49 கோடி ரூபாய் நகராட்சிக்கு வருவாய் உயர்வும், மறு அளவீடு செய்யப்பட்ட வகையில் 3.13 லட்சம் ரூபாயும் என, மொத்தம் 7.52 கோடி ரூபாய் புதிய வரி விதிக்கப்பட்டு, வசூல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ இணையவழி மூலமாக http://tnurbanepay.tn.gov.in செலுத்தலாம்.
பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, வருவாய் பிரிவில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, மறைமலை நகர் நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையில் உள்ள தொகையை செலுத்த தவறினால், நகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.