/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச சுற்றுலா பயணியர் இளநீர் அருந்த ஆர்வம்
/
சர்வதேச சுற்றுலா பயணியர் இளநீர் அருந்த ஆர்வம்
ADDED : ஜன 27, 2025 11:11 PM

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் திரளும் சர்வதேச பயணியர், செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து, இயற்கை இளநீரை ஆர்வத்துடன் அருந்துகின்றனர்.
பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள், மாமல்லபுரத்தில் உள்ளன.
அவற்றைக் காண, சர்வதேச சுற்றுலா பயணியர், ஆண்டு இறுதியில் அக்., மற்றும் மார்ச் மாதம் திரள்கின்றனர்.
அந்தந்த நாட்டு தட்ப வெப்பநிலை, விடுமுறை ஆகிய சூழலுக்கேற்ப, குழு பயணியர், குடும்பத்தினர், தனிநபர் என, தென்னிந்திய சுற்றுலா வருகின்றனர்.
தற்போதும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணியர் மாமல்லபுரத்தில் குவிந்து, சிற்பங்களை ரசிப்பதால் சுற்றுலா களைகட்டுகிறது. காலை 11:00 மணிக்கே வெயில் தகிக்கிறது.
சிற்பங்களை ரசித்துவிட்டு வெயிலால் களைப்படையும் சூழலில், தாகம் தணிக்க விரும்புகின்றனர்.
பொதுவாக பாட்டில் குடிநீர், செயற்கை குளிர்பானம் ஆகியவற்றையே அவர்கள் விரும்பி அருந்துவர்.
வழிகாட்டியாகச் செல்வோர் இயற்கை இளநீரை பற்றி விளக்குவதால், மர நிழலில் இளைப்பாறி, தற்போது இளநீரை ஆர்வத்துடன் அருந்தி வருகின்றனர்.

