/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு ஒதுக்கீடு செய்யாததால் இடம்பெயர்ந்த இருளர்கள்
/
வீடு ஒதுக்கீடு செய்யாததால் இடம்பெயர்ந்த இருளர்கள்
ADDED : நவ 17, 2024 07:38 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கீழ்அத்திவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. கீழ்அத்திவாக்கத்தில் இருந்து பாபுராயன்பேட்டை செல்லும் சாலையோரம் இருளர் குடியிருப்பு உள்ளது.
இப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர், குடிசை அமைத்து வசித்து வந்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, சிமென்ட் சாலை, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டன.
விவசாய கூலி வேலைக்காக உத்திரமேரூர், வந்தவாசி, மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கூலி வேலைக்கு செல்கின்றனர்.
தொடர்ந்து, அப்பகுதியிலேயே தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். கீழ்அத்திவாக்கம் பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் வீடுகள் இல்லாததால், வேலைக்கு செல்லும் பகுதியிலேயே கூடாரம் அமைத்து வசிக்கின்றனர்.
எனவே, இருளர் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரவும், மகளிர் குழுவின் வாயிலாக, பொருளாதார வசதி ஏற்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.