/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவமழை பாதிப்பிலிருந்து செங்கை மாவட்டம்.. தப்புமா? 30 ஆண்டுகளாக ஏரிகளை துார்வாராமல் அலட்சியம்
/
பருவமழை பாதிப்பிலிருந்து செங்கை மாவட்டம்.. தப்புமா? 30 ஆண்டுகளாக ஏரிகளை துார்வாராமல் அலட்சியம்
பருவமழை பாதிப்பிலிருந்து செங்கை மாவட்டம்.. தப்புமா? 30 ஆண்டுகளாக ஏரிகளை துார்வாராமல் அலட்சியம்
பருவமழை பாதிப்பிலிருந்து செங்கை மாவட்டம்.. தப்புமா? 30 ஆண்டுகளாக ஏரிகளை துார்வாராமல் அலட்சியம்
ADDED : ஆக 25, 2025 09:48 PM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல், 500க்கும் மேற்பட்ட ஏரிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. பெரும்பாலான ஏரிகளின் வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டு மனைகளாக மாறியுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டம் பருவமழைக்கு தப்புமா என, கேள்வி எழுந்துள்ளது.
ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், ஆறு பேரூராட்சிகள் மற்றும் 359 ஊராட்சிகள் உள்ளன.
இவற்றில் பெரிய ஏரி, சித்தேரி, தாங்கல் ஏரி, குட்டை உட்பட, 1,500க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன.
இதில், 100 ஏக்கர் பரப்பிற்கும் மேலாக உள்ள 526 ஏரிகள், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை வசம், 620 ஏரிகள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தின் 40 சதவீத பகுதிகள் நகரமயமாக்கலின் பிடியில் சிக்கினாலும், மீதமுள்ள 60 சதவீத பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
ஆனாலும், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் அரசு நிர்வாகம் மெத்தப்போக்குடன் செயல்படுவதாக, நீர்நிலை ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
செங்கை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் இருந்த 300க்கும் மேற்பட்ட குட்டைகள், கடந்த 30 ஆண்டுகளில் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, காணாமல் போய்விட்டன.
தவிர, 10 ஏக்கர் பரப்பில் இருந்த தாங்கல் கரையோரங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, இன்று 5 ஏக்கருக்கும் குறைவான பரப்பில் சுருங்கி விட்டன.
மேலும், சித்தேரிகள் மற்றும் பெரிய ஏரிகளின் சுற்றுப்புறங்களும் தொடர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அவற்றின் பரப்பும் சுருங்கி விட்டது.
செங்கல்பட்டு மாவட்ட விவசாய தொழிலின் அடிப்படையாகவும், நிலத்தடி நீர்மட்டத்தின் ஆதாரமாகவும் உள்ள இந்த நீர்நிலைகள், கடந்த 30 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை.
இதனால், 500க்கும் மேற்பட்ட ஏரிகளைச் சுற்றிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, அந்த ஏரிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.
தவிர, ஏரியை நோக்கி மழைநீர் வந்தடைய உதவும் வரத்து கால்வாய்களும், ஏரி நிரம்பிய பின், உபரி நீர் வெளியேறிச் செல்ல உதவும் போக்கு கால்வாய்களும், தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டன.
இதனால், மழைக் காலங்களில் ஏரியை வந்தடைய வேண்டிய மழைநீர், உரிய கால்வாய் வசதியின்றி தெருக்களில் தஞ்சமடைந்து, குடியிருப்பு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனை நீர்நிலைகள் உள்ளன, அவற்றின் தற்போதைய பரப்பு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பரப்பின் அளவு, வரத்து மற்றும் போக்கு கால்வாய்களின் நீளம், அகலம் குறித்த தெளிவான விபரம், மாவட்ட நிர்வாகம் வசம் இல்லை.
முன்பு பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்த பெரிய ஏரிகள், 2021க்குப் பின், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டு விட்டன.
தற்போது நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் வசம் எந்தெந்த ஏரிகள் உள்ளன என்ற விபரங்களும், தெளிவாக இல்லை.
ஏரிகளை துார்வாரும் பணி என்ற கணக்கில், ஆண்டுதோறும் பல நுாறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டாலும், பெரும்பாலான ஏரிகளின் நிலைமை அப்படியே தான் உள்ளது.
கடந்த மே 16ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்தில், 16.10 கோடி ரூபாய் செலவில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில், 200 ஏரிகளில் துார்வாரும் பணி, மாவட்ட கலெக்டரால் துவக்கப்பட்டது.
இதற்கான நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாவும், தனியார் நிறுவனங்களின் நிதி பங்களிப்பில் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முரண்கள் எழுந்த நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஏரிகள் துார்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பு மற்றும் வெளிப்படை தன்மை அவசியம் வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், 'ஏரி துார்வாரும் பணியை துவக்கும் போது, திட்டத்தின் பெயர், பணியின் பெயர், ஒதுக்கப்பட்டுள்ள நிதி, ஒப்பந்ததாரர் பெயர் ஆகியவற்றை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும்' என்றார்.
அதைத் தொடர்ந்து, பல ஏரிகளில் துார்வாரும் பணிகள் பூமி பூஜையுடன் துவக்கி வைக்கப்பட்டன.
ஆனால், பூமி பூஜை நடத்தப்பட்ட பின், 100 நாட்கள் கடந்தும், இதுவரை துார்வாரும் பணிகள் நடந்ததாக, எவ்வித அறிகுறியும் இல்லை.
ஏரிகள் பராமரிப்பில் மெத்தனம் காட்டப்படுவதும், முறைகேடுகள் நடப்பதும் இதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், வேளாண் தொழில் நசிவடைந்து வருகிறது. தவிர, முழு கொள்ளளவு நீர் தேங்காமல், ஏரிகள் வறண்ட நிலமாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், பெரும்பாலான ஏரிகளின் வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டு மனைகளாக மாறியுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டம் பருவமழைக்கு தப்புமா என, கேள்வி எழுந்துள்ளது.
எனவே, ஏரிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகள் குறித்த தெளிவான விபரங்களை, உரிய படங்களுடன் மாவட்ட நிர்வாகம் இணையத்தில் வெளியிட வேண்டும்.
அதில், அனைத்து நீர்நிலைகளும் கடைசியாக எப்போது துார்வாரப்பட்டன, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, 40 ஆண்களுக்கு முன் அவற்றின் பரப்பு எவ்வளவு, தற்போதைய பரப்பின் அளவு எவ்வளவு, ஏரியின் வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய் விபரங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பரப்பின் அளவு உட்பட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
இந்த விபரங்களை, நீர்நிலையின் நான்கு பக்கங்களிலும் பலகைகளில் குறிப்பிட்டு பொதுமக்கள் அறியும்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தற்போது நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் வசம் எந்தெந்த ஏரிகள் உள்ளன என்ற விபரங்களும், தெளிவாக இல்லை. ஏரிகளை துார்வாரும் பணி என்ற கணக்கில், ஆண்டுதோறும் பல நுாறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டாலும், பெரும்பாலான ஏரிகளின் நிலைமை அப்படியே தான் உள்ளது.