/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபாலில் ஜேப்பியார் 'சாம்பியன்'
/
வாலிபாலில் ஜேப்பியார் 'சாம்பியன்'
ADDED : செப் 30, 2024 06:38 AM

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி, கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்தது. இதில், ஜேப்பியார், ஐ.ஐ.டி., சென்னை உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தன.
இதில் 'லீக்' சுற்றில், ஜேப்பியார் பல்கலை அணி, 25 - 11, 25 - 23, 25 - 13 என்ற கணக்கில் ஐ.ஐ.டி., சென்னையை வீழ்த்தியது.
மற்ற இரண்டு லீக் சுற்றுகளில், ஜேப்பியார் அணி, 25 - 13, 25 - 17, 25 - 15 என்ற கணக்கில் நாசரேத் அணியையும், 25 - 17, 21 - 25, 25 - 22, 25 - 14 என்ற கணக்கில் குருநானக் அணியையும் வீழ்த்தியது.
அனைத்து 'லீக்' சுற்றுகள் முடிவில், ஜேப்பியார் பல்கலை அணி முதலிடத்தையும், நாசரேத் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., அணி முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் கைப்பற்றின.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், கொங்கு கோப்பைக்கான வாலிபால் போட்டி, கடந்த 26ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், பெண்கள் பிரிவில், தமிழகத்தின் 40க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டியின் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை ஜேப்பியார் பல்கலை அணி வீராங்கனையர் வெளிப்படுத்தினர். முதல் ஆட்டத்தில் சக்தி கைலாஷ் கல்லுாரியை 25 - -19, 25 - -22, 25- - 17 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். அடுத்த சுற்றில் ஜமால் கல்லுாரி அணியை, 25 - -7, 25 - -5, 25 - -14 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர்.
பரபரப்பான இறுதி லீக் சுற்று ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேப்பியார் வீராங்கனையர், 25- - 19, 25- - 23, 26 - -24 என்ற புள்ளிக் கணக்கில், பி.கே.ஆர்., கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றனர்.