/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் விவகாரத்தில்... கூட்டு கொள்ளை! : அதிகாரிகள், ஊழியர்கள் கைகோர்ப்பால் அதிருப்தி
/
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் விவகாரத்தில்... கூட்டு கொள்ளை! : அதிகாரிகள், ஊழியர்கள் கைகோர்ப்பால் அதிருப்தி
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் விவகாரத்தில்... கூட்டு கொள்ளை! : அதிகாரிகள், ஊழியர்கள் கைகோர்ப்பால் அதிருப்தி
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் விவகாரத்தில்... கூட்டு கொள்ளை! : அதிகாரிகள், ஊழியர்கள் கைகோர்ப்பால் அதிருப்தி
UPDATED : செப் 23, 2025 11:44 PM
ADDED : செப் 23, 2025 11:23 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்பக் கொடுத்து, 10 ரூபாய் பெறும் திட்டத்தில், டாஸ்மாக் அதிகாரிகளும், ஊழியர்களும் கூட்டு கொள்ளை நடத்தி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
![]() |
தமிழகத்தின் மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணியர், மது அருந்திவிட்டு, காலி மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசிவிட்டு செல்வது வழக்கம்.
மரம், செடிகளுக்கு இடையே வீசப்படும் இந்த காலி பாட்டில்கள், வன விலங்குகளின் கால்களில் குத்தி, காயங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
தவிர, காலி பாட்டில்களால் காடுகளின் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம், சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது. மது பாட்டில் விற்பனையின்போது, 10 ரூபாயை கூடுதலாக வசூலித்துவிட்டு, 'குடி'மகன்கள் காலி பாட்டிலை கொடுத்து, 10 ரூபாய் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில், ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.
கடந்த 1ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால், மலைப் பிரதேசங்களில் உள்ளது போல், இங்கு வெற்றிகரமாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து, கொள்ளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு குடிமகன்கள் கூறியதாவது:
காலி மது பாட்டில் திரும்பப் பெறும் நடைமுறையால், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது.
பாட்டிலை திருப்பி கொடுக்கச் சென்றால், வாங்கிய கடையில்தான் கொடுக்க வேண்டும் என, கடை ஊழியர்கள் வாங்க மறுக்கின்றனர். பாட்டிலை அடையாளம் காண, ஸ்டிக்கரும் ஒட்டப்படுகிறது.
இந்த வகையில், 'ஸ்மார்ட்' கடைகளில் மது வாங்கும் குடிமகன்களில், 40 சதவீதம் பேர், அங்கேயே மது அருந்துவதில்லை. இவர்கள், தங்களுக்கு உகந்த இடம் அல்லது வீடுகளுக்குச் சென்ற பின், அங்கு மது அருந்துகின்றனர்.
ஒரு கடையில் வாங்கிய சரக்கு பாட்டிலை, இன்னொரு கடையில் திரும்பக் கொடுத்து பணம் பெற முடியவில்லை. 10 ரூபாய்க்காக எங்கோ சென்றபோது வாங்கிய பாட்டிலை திருப்பிக் கொடுக்க அங்கு செல்ல முடியாது. காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தால், குடிமகன்களுக்கு பெரிதாக பலன் இல்லை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில், ஏற்கனவே குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். தற்போது, பாட்டிலுக்கு 10 ரூபாய் என, 20 ரூபாய் கூடுதலாக தர வேண்டியுள்ளது.
இதன்படி, ஒரு நாளைக்கு 5,000 மது பாட்டில்கள் விற்பனையாகும் டாஸ்மாக் கடையில், 2,000 காலி பாட்டில்கள் திரும்ப வருவதில்லை.
ஆனால், விற்பனையான அனைத்து பாட்டில்களும் திரும்ப பெறப்பட்டதாக கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் மூலமாக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம், 2,000 பாட்டிலுக்கு கிடைக்கும், 20,000 ரூபாய் உபரி வருமானத்தை, டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கிட்டு கொள்ள வாய்ப்பு உள்ளது.
எனவே, ஒரு கடையில் வாங்கிய மது பாட்டிலை, தமிழகத்தின் எந்த டாஸ்மாக் கடையிலும் திரும்ப கொடுத்து, 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என, அரசு உத்தரவிட வேண்டும்.
தவிர, கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக, மறு சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய வகையிலான பிளாஸ்டிக் புட்டிகளில் மதுவை அடைத்து விற்பனை செய்ய, தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.