sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடப்பாக்கம் பனை வெல்லம் உற்பத்தி ஆலை...புத்துயிர் பெறுமா! 20 ஆண்டாக முடங்கி பனை விவசாயிகள் அவதி

/

கடப்பாக்கம் பனை வெல்லம் உற்பத்தி ஆலை...புத்துயிர் பெறுமா! 20 ஆண்டாக முடங்கி பனை விவசாயிகள் அவதி

கடப்பாக்கம் பனை வெல்லம் உற்பத்தி ஆலை...புத்துயிர் பெறுமா! 20 ஆண்டாக முடங்கி பனை விவசாயிகள் அவதி

கடப்பாக்கம் பனை வெல்லம் உற்பத்தி ஆலை...புத்துயிர் பெறுமா! 20 ஆண்டாக முடங்கி பனை விவசாயிகள் அவதி


ADDED : பிப் 09, 2025 12:18 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், பிப். 9- செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக, பனை வெல்லம் உற்பத்தி ஆலை முடங்கியுள்ளது. இதை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பனை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடப்பாக்கம், கரும்பாக்கம், வெண்ணாங்குபட்டு, வேம்பனுார், விளம்பூர், பனையூர் என, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மாவட்டத்திலேயே, இடைக்கழிநாடு பகுதியில் தான், பனை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட பனை விவசாயிகள் உள்ளனர்.

எனவே, பனையை ஆதாரமாகக் கொண்டு, தொழிலாளர் வாழ்வாதாரம் மற்றும் பனை பொருட்கள் உற்பத்தி மேம்பாடு கருதி, தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சார்பாக, கடந்த 1967ல், கடப்பாக்கம் பகுதியில் தும்பு தயாரிப்பு துவக்கப்பட்டது.

பனை நாரில் இருந்து தும்பு எனப்படும் துடைப்பான் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 1968ல் பனை தொழிலாளர்கள் இணைந்து கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையமாக மேம்படுத்தப்பட்டது.

மேலும் 4.17 ஏக்கர் பரப்பளவில் பனை வெல்லம் உற்பத்தி ஆலையும் நிறுவப்பட்டது.

பனைத் தொழிலாளர் உற்பத்தி செய்யும் பதநீர் கொள்முதல் செய்யப்பட்டு பனை வெல்லம், பனஞ்சர்க்கரை, கற்கண்டு, பானம், சாக்லெட் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டன.

மேலும், பனை நாரில் இருந்து தும்பு, கூடை, தட்டு, விசிறி, பாய் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.

அப்பகுதி மக்கள் சுயதொழில் துவங்க ஏதுவாக, பனை நாரில் இருந்து தும்பு, கூடை, தட்டு, விசிறி, பாய் ஆகியவை தயாரிக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டன.

துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

துவக்கத்தில் பனை பொருள் நிர்வாகம், தமிழக கதர் வாரியத்தின் ஒரு பிரிவாக, சிறந்த முறையில் இயங்கியது. மத்திய கதர் வாரியம், இதற்கு நிதியுதவி அளித்தது.

நேரடியாக 100 பேரும், மறைமுகமாக 5,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

கடந்த 1994ல் வாரியம் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

இதனால், மத்திய கதர் வாரியம் அளித்த நிதி உதவி நிறுத்தப்பட்டது.

2001 வரை திறம்பட இயங்கிய சூழலில், நாளடைவில் நிதி நெருக்கடியால் இந்த இணையம் பாதிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக பனை பொருள் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

பதநீரை மட்டும் சில மாதங்கள், பெயரளவுக்கு ஆரம்ப காலத்தில் 3,000 லிட்டர் அளவுக்கு கொள்முதல் செய்த நிலையில், தற்போது 500 லிட்டருக்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழக வடமாவட்டங்களுக்கு பனை பொருட்கள் உற்பத்திக்கான ஒரே இணையமாக இந்த பனை வெல்லம் உற்பத்தி ஆலை இயங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஆலையை துவக்கி பனை வெல்லம் உற்பத்தியை மேம்படுத்த வேண்டுமென, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்த பனை வெல்லம் உற்பத்தி ஆலையின் பழைய கட்டடங்கள், முற்றிலும் சிதலமடைந்துள்ளன.

பனை வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கொதிகலன்களும் சிதிலமடைந்து, ஆலைக்குச் சொந்தமான இடமும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, தென்மாவட்டத்தைச் சேர்ந்த சில தனியார் நிறுவனங்கள், கருப்பட்டியின் பயன்கள் குறித்து மக்களிடையே 'மார்க்கெட்டிங்' செய்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கிளைகள் நிறுவி கறுப்பட்டி காபி, அல்வா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டுகின்றனர்.

சொந்தமாக பனை வெல்லம் உற்பத்தி செய்ய இயலாத பல நிறுவனங்கள், பனை விவசாயிகளிடம் இருந்து பனைவெல்லத்தை கொள்முதல் செய்து, அதை மதிப்புக் கூட்டி விற்று, இந்த துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

இதனால், சொந்தமாக பனை வெல்லம் உற்பத்தி ஆலை மற்றும் பனை விவசாயிகளின் ஆதரவு உள்ள கடப்பாக்கம், பனை வெல்லம் உற்பத்தி ஆலையை லாபகரமான முறையில் இயக்க முடியும்.

எனவே, தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, ஆலைக்குச் சொந்தமான இடத்தை மீட்டு, அளவீடு செய்து சுற்றுச்சுவர் அமைத்து, ஆலையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பனைத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, பனை விவசாயிகள் கூறியதாவது:

பனை விவசாயிகள் கள் இறக்க, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடப்பாக்கம் பகுதிக்கு தனி அலுவலர் நியமனம் செய்து, பதநீர் இறக்க பனை தொழிலாளர்களுக்கு லைசென்ஸ் வழங்கவும், பழைய லைசென்ஸை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடப்பாக்கம் பனை வெல்லம் உற்பத்தி ஆலையில், 1 லிட்டர் பதநீர், 24 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் கள், 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனால், பனை விவசாயிகள் கள் இறக்க அனுமதி பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பனை வெல்லம் உற்பத்தி ஆலையை திறம்பட செயல்படுத்த, பதநீர் கொள்முதல் விலையை 60 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கடப்பாக்கம் பகுதியில் பெரும்பாலானோர் பனை மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பகுதியில் பிப்., முதல் ஜூலை வரை, கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானமே, மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது.

பதநீர் இறக்குவதற்கான லைசென்ஸ் பெற சென்னை மற்றும் காஞ்சிபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பனை தொழிலாளர் லைசென்ஸ் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். கள் இறக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கடப்பாக்கத்திலேயே லைசென்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.எஸ்.ஜெயராமன்,

சமூக ஆர்வலர், கடப்பாக்கம்.






      Dinamalar
      Follow us