/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் - பெங்களூரு விரைவு பேருந்து இயக்கம்
/
கல்பாக்கம் - பெங்களூரு விரைவு பேருந்து இயக்கம்
ADDED : மார் 18, 2024 03:01 AM
கல்பாக்கம் : கல்பாக்கத்தில் இயங்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவற்றில், தமிழகம், நாட்டின் பிற பகுதியினர் பணிபுரிகின்றனர்.
கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கும் அவர்கள், தங்கள் குடும்பம், உறவினர் குடும்ப விழாக்கள், பிற நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க, தொலை துார இடங்களுக்கு செல்கின்றனர். பிற இடங்களிலிருந்து, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் பயணியர், அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்ய, சென்னை, செங்கல்பட்டு சென்று அவதிப்படுகின்றனர்.
அவர்களுக்காக, கல்பாக்கத்திலிருந்து நாகர்கோவில், கோயம்புத்துார், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு, அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கொரோனா தடுப்பு ஊரடங்கின் போது, அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின், மீண்டும் இயக்கப்படாமல், இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியின் முக்கியத்துவம், பயணியர் சேவை கருதி, இப்பேருந்துகளை மீண்டும் இயக்க, இப்பகுதியினர் வலியுறுத்தியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், முதற்கட்டமாக பெங்களூரு பேருந்து, நேற்று முன்தினம் முதல் இயக்கப்படுகிறது. கல்பாக்கத்தில், தினமும் இரவு 8:30 மணிக்கு அப்பேருந்து புறப்படுகிறது.

