/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம்...இழுத்தடிப்பு!:ரூ.300 கோடி ஒதுக்கியும் ஓராண்டாக தாமதம்;நேரடியாக கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் பாழ்
/
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம்...இழுத்தடிப்பு!:ரூ.300 கோடி ஒதுக்கியும் ஓராண்டாக தாமதம்;நேரடியாக கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் பாழ்
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம்...இழுத்தடிப்பு!:ரூ.300 கோடி ஒதுக்கியும் ஓராண்டாக தாமதம்;நேரடியாக கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் பாழ்
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம்...இழுத்தடிப்பு!:ரூ.300 கோடி ஒதுக்கியும் ஓராண்டாக தாமதம்;நேரடியாக கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் பாழ்
ADDED : ஆக 05, 2024 12:46 AM

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்த, 300.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஓராண்டு கடந்தும், டெண்டர் விடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. கால்வாய்களில் வழிந்தோடும் கழிவுநீர் நேரடியாக ஏரிகளில் கலப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மறைமலை நகர் நகராட்சி, 21 வார்டுகள் உடையது. இங்கு, நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆறு வார்டுகளில் மட்டுமே, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விடுபட்ட மற்ற 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், அந்த பகுதிகளில், குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தனியார் டேங்க் லாரிகள் வாயிலாக எடுக்கப்பட்டு, சாலை ஓரங்கள், காப்புகாடுகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மழைநீர் கால்வாய்கள் கழிவுநீர் கால்வாய்களாக மாறி, சுற்றியுள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதன் காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே பாதாள சாக்கடை உள்ள பகுதிகளிலும், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், நேரடியாக காட்டாங்கொளத்துார் ஏரி, நின்னைக்கரை ஏரிகளில் விடப்பட்டு வருகிறது.
எனவே, மறைமலை நகர் அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என, பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் சார்பில், மறைமலை நகர் நகராட்சி நிலப்பரப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், சட்டமங்கலம், களிவந்தப்பட்டு, திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இது குறித்த கருத்து கேட்பு கூட்டம், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
இதையடுத்து, கருத்துரு உருவாக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், 300.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அறிவித்தது.
டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கிய 2 ஆண்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, அப்போது கூறப்பட்டது.
ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டை கடந்த நிலையில், இதுவரை பணிகளுக்கான டெண்டர் விடப்படவில்லை.
கழிவுநீர் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை துவங்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு, இரண்டு நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்து உள்ளன. அந்த நிறுவனங்களும், 15 சதவீதம் அதிகமான தொகை குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளன. விரைவில், முறையாக டெண்டர் விடப்பட்டு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்படும்.
- -மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகள்
மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் விதிகளை மீறி, நச்சுக்கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக ஏரியில் விடுகின்றன. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரின் தன்மை மாறுகிறது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகம், முறையாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி, கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
- ஜே.சார்லஸ்
வழக்கறிஞர், மறைமலை நகர்