/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
7 ஆண்டாக குப்பை தேங்கிய கொளத்துார் கிடங்கிற்கு...விமோசனம்: 'பயோ மைனிங்' கில் அரைத்து உரம் தயாரிப்பு துவக்கம்
/
7 ஆண்டாக குப்பை தேங்கிய கொளத்துார் கிடங்கிற்கு...விமோசனம்: 'பயோ மைனிங்' கில் அரைத்து உரம் தயாரிப்பு துவக்கம்
7 ஆண்டாக குப்பை தேங்கிய கொளத்துார் கிடங்கிற்கு...விமோசனம்: 'பயோ மைனிங்' கில் அரைத்து உரம் தயாரிப்பு துவக்கம்
7 ஆண்டாக குப்பை தேங்கிய கொளத்துார் கிடங்கிற்கு...விமோசனம்: 'பயோ மைனிங்' கில் அரைத்து உரம் தயாரிப்பு துவக்கம்
UPDATED : ஏப் 13, 2025 02:11 AM
ADDED : ஏப் 12, 2025 08:46 PM

மறைமலை நகர்:
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும், 520 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்த குப்பை அனைத்தும் 'டாரஸ்' லாரிகள் வாயிலாக காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையோரம் உள்ள, 44 ஏக்கர் பரப்பளவு அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 2019ம் ஆண்டு முதல் கொட்டப்பட்டு வருகின்றன.
மேலும், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், புனிததோமையர்மலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையும், இந்த குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு, தற்போது மலை போல் குவிந்து உள்ளது. கொளத்துார் குப்பைக் கிடங்கை சுற்றி நீர் வழித்தடங்கள், ஏரிகள், மலைகள், நெடுஞ்சாலை மற்றும் 767 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன.
இதனால், இங்கு குப்பைக் கிடங்கு அமைக்க, சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் துவக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.
அப்போது, 'குப்பை தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரமாக தயாரிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதன் பின் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 2023ம் ஆண்டு,'மிக்ஜாம்' புயலின் போது மட்டும், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து 4,160 டன் குப்பை கொண்டு வந்து, கொளத்துார் கிடங்கில் கொட்டப்பட்டது.
தற்போது, ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நீர்நிலைகளில் நேரடியாக கலந்து கடும் துர்நாற்றம் வீசி, சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது.
எனவே, இந்த குப்பைக் கிடங்கில்,'பயோ மைனிங்' திட்டத்தை விரைந்து துவங்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழிலும், இந்த பகுதியில்ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி சார்பில், 35 கோடியே 77 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில்,'பயோ மைனிங்' முறையில் குப்பையை தரம் பிரிக்கும் பணிகளுக்கு,'டெண்டர்' விடப்பட்டு, தனியார் நிறுவனம் வாயிலாக பணிகள் துவங்கப்பட்டன.
குப்பைக் கிடங்கில் சிமென்ட் சாலை, எடை மேடை மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது இப்பணிகள் நிறைவடைந்து, குப்பையை அரைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இரண்டு ஆண்டுகளில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 834 மெட்ரிக் டன் குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்கவும், பிளாஸ்டிக் குப்பையை சிமென்ட் தொழிற்சாலை அல்லது மின்சாரம் தயாரிக்க அனுப்பி வைக்க உள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கொளத்துார் கிடங்கில், ஏழு ஆண்டுகளாக குப்பை குவிக்கப்படும் பிரச்னைக்கு விமோசனம் கிடைத்துள்ளதால், பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.
குப்பைக் கிடங்குகளில் உள்ள மட்கும் குப்பையையும், மட்காத குப்பையையும் பிரித்தெடுத்து, அதில் உள்ள மட்கும் குப்பையை இயற்கை உரமாகவும், மட்காத குப்பையை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தலாம்.
அல்லது அவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பது தான், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தொடர்கதை
இயற்கை வளத்தை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலந்து நிலத்தடி நீர் பாதிப்படைந்து வருகிறது. மேலும் குப்பை ஏற்றி வரும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் வருவதால், குப்பை சிதறுகிறது. கடைசியாக லாரிகளில் உள்ள குப்பையை, நெடுஞ்சாலையில் ஓட்டுநர்கள் கொட்டி வருவது, தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.ஜெகன்,
சிங்கபெருமாள் கோவில்.