/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குற்றச்சம்பவங்களை தடுக்க 61 'சிசிடிவி'க்கள் கோவளம் ஊராட்சி அசத்தல்
/
குற்றச்சம்பவங்களை தடுக்க 61 'சிசிடிவி'க்கள் கோவளம் ஊராட்சி அசத்தல்
குற்றச்சம்பவங்களை தடுக்க 61 'சிசிடிவி'க்கள் கோவளம் ஊராட்சி அசத்தல்
குற்றச்சம்பவங்களை தடுக்க 61 'சிசிடிவி'க்கள் கோவளம் ஊராட்சி அசத்தல்
ADDED : அக் 04, 2024 01:23 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் ஊராட்சி உள்ளது. இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா ஆகியவை உள்ளன.
இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். உள்நாடு, சர்வதேச பயணியரும் சுற்றுலா வருகின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தங்கி சென்ற ரிசார்ட் உள்ளிட்ட பல்வேறு ரிசார்ட்டுகள் உள்ளன.
இங்கு, சென்னை கோயம்பேடு, தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, இ.சி.ஆர்., சாலையில் அடிக்கடி விபத்துகளும், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன.
எனவே, கோவளத்தை முழு பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவர, ஊராட்சி பகுதி முழுதும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த, அப்பகுதியை சேர்ந்த எஸ்.டி.எஸ்., பவுண்டேசன் நிறுவனர் சுந்தர் உதவியுடன், கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம், கேளம்பாக்கம் போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, 25.63 லட்சம் ரூபாய் மதிப்பில், இ.சி.ஆர்., கோவளம்- - கேளம்பாக்கம் சந்திப்பு சாலை, குன்றுக்காடு சந்திப்பு சாலை, செம்மஞ்சேரி சந்திப்பு சாலை, கடற்கரை பகுதி, மீன் மார்க்கெட் பகுதி, வழிபாட்டு தலங்கள், முக்கிய தெருக்கள் என, பல்வேறு இடங்களில், 61 நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமரா பொருத்தும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே, பணி முடிந்த கடற்கரை பகுதியில் மீன் திருட்டு, பைக் திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அனைத்து பகுதிகளிலும் கேமரா பொருத்தி, அதன் அனைத்து இணைப்புகளும் ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் இணைக்கப்பட்டுள்ளன.
அங்கு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் முதல், முழுமையான பணி முடிந்து, அனைத்து கேமராக்களும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
கோவளத்தில் உள்ளே நுழைந்து வெளியேறும் முக்கிய பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், குற்றச்சம்வங்களில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது என, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.