/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக கட்டுமான பணி ஆகஸ்டில் முடியும்
/
கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக கட்டுமான பணி ஆகஸ்டில் முடியும்
கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக கட்டுமான பணி ஆகஸ்டில் முடியும்
கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக கட்டுமான பணி ஆகஸ்டில் முடியும்
ADDED : ஏப் 29, 2025 11:52 PM

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அனைத்து பணிகளும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி 8.5 ச.கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. இங்கு, 30 வார்டுகளில், 258 தெருக்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
தவிர, புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில், நகரத்தின் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஜி.எஸ்.டி., சாலை அருகே கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லை என்பதால், புதிய அலுவலகம் கட்ட, 2021ல் கோரிக்கை எழுந்தது.
அதன்படி, தமிழக அரசு 350 லட்சம் ரூபாயில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு, 2022ல் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் கூறியதாவது:
தமிழகம் முழுதும் இயங்கிவரும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலக கட்டடங்களில், போதிய இட வசதி இல்லாத 78 அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக, புதிய கட்டடங்கள் கட்ட, 2022ல், அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கு, 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பேருந்து நிலையம் பின்புறம், வண்டலுார் தாலுகா அலுவலகம் அடுத்து, அரசுக்கு சொந்தமான 64 சென்ட் காலி நிலத்தில், 2,589 ச.மீ., பரப்புள்ள இடத்தில், புதிய அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் 2023, ஜனவரியில் துவக்கப்பட்டன.
இங்கு வாகன நிறுத்துமிடம், பொது மக்கள் ஓய்வறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், தலா 13,031 சதுர அடியில், தரை தளம் மற்றும் மேல்தளம் கட்டப்படுகிறது.
தற்போது, 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடையும். அதன் பின், பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இவ்வாறு நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.