/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரை கோவில் பகுதிக்கு கூடுதல் பாதை... l அவசியம்! மாமல்லை நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
/
கடற்கரை கோவில் பகுதிக்கு கூடுதல் பாதை... l அவசியம்! மாமல்லை நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
கடற்கரை கோவில் பகுதிக்கு கூடுதல் பாதை... l அவசியம்! மாமல்லை நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
கடற்கரை கோவில் பகுதிக்கு கூடுதல் பாதை... l அவசியம்! மாமல்லை நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2024 11:04 PM

மாமல்லபுரம், . 5-
மாமல்லபுரத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா வாகனங்கள் கடற்கரை கோவில் பகுதிக்கு, குறுகிய கடற்கரை சாலையில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கலங்கரை விளக்கம் அல்லது ஐந்து ரதங்கள் பகுதிகளிலிருந்து, கடற்கரை கோவில் பகுதிக்கு கூடுதல் பாதை ஏற்படுத்த வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடைவரைகள் ஆகிய பல்லவர் கால சிற்பங்களை ரசிக்க உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
குறிப்பாக, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தியதை தொடர்ந்து, தற்போது சுற்றுலா களைகட்டுகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில், மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.
பெரும்பாலானோர் தனி வாகனத்தில் வரும் நிலையில், இங்கு கார், இருசக்கர வாகனம் ஆகியவை குவிகின்றன.
அதற்கேற்ப பிரதான சாலைகள், மையத்தடுப்புடன் விசாலமாக இருக்க வேண்டும். ஆனால், மாமல்லபுரம் சாலைகள் நீண்ட காலமாக, மிக குறுகிய சாலைகளாகவே உள்ளன.
இதனால், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல இயலாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிக்குச் செல்ல, ஒரே குறுகிய சாலையே உள்ளது.
பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து, கடற்கரை கோவில் வளாகம் வரை, 750 மீ., கொண்ட இச்சாலை, 23 அடி அகலம் மட்டுமே உள்ளது. வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படும் போது, இன்னும் அகலம் குறைகிறது.
அர்ஜுனன் தபசு, ஐந்து ரதங்கள், கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்கரை கோவில் பகுதிக்கு, இச்சாலை வழியே தான் செல்ல வேண்டும்.
கடற்கரை பகுதிக்கான ஒரே சாலை என்பதால், ஏராளமான வாகனங்கள் குவியும் போது, ஆமை வேகத்தில் நகர வேண்டியுள்ளது.
அதிலும், எதிர் திசையில் வாகனங்கள் வரும் போது, நிலைமை மோசமாகி விடுகிறது. அந்த நேரத்தில், பாதசாரிகள் நடக்க கூட வழியின்றி தவிக்க நேரிடுகிறது.
கடலில் சிக்கி பாதிக்கப்படுவோரை மீட்க, ஆம்புலன்களும் அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
மாமல்லபுரம் பேருந்து நிலையம் பகுதியில், இச்சாலையுடன் பழைய சிற்பக் கல்லுாரி சாலை, கிழக்கு ராஜ வீதி, தென்மாட வீதி ஆகிய சாலைகள் உள்ளன.
அர்ஜுனன் தபசு சிற்பத்திற்குச் செல்லும் பாடசாலை தெருவும், அருகில் உள்ளது. கடற்கரை சாலை நெரிசலில் வாகனங்கள் சிக்கும் போது, மேற்கண்ட சாலைகளிலும் வாகனங்கள் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
இதை தவிர்க்க ஐந்து ரதங்கள், கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து, கடற்கரை கோவில் பகுதிக்கு சாலைகள் அமைக்கலாம்.
இவ்வாறு சாலை அமைந்தால், கடற்கரை கோவில் பகுதிக்கு வெவ்வேறு பாதையில் வாகனங்கள் செல்ல முடியும். போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, அன்றைய மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஐந்து ரதங்கள் பகுதியில் உள்ள தனியார் திறந்தவெளி வளாக பகுதி வழியாக சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்தார்.
தனியார் இடம் என்பதால், அந்த முயற்சி கிடப்பில் உள்ளது. எனவே, தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு, கடற்கரை பகுதிக்கு கூடுதல் பாதை அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
போதிய அகலம் இல்லை
மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில் மற்றும் கடற்கரைக்குச் செல்ல, ஒரே பாதை தான் உள்ளது. இந்த பாதையும் போதிய அகலத்தில் இல்லை. தற்போது, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதற்கு, ஒரே பாதை போதாது. கடற்கரை கோவில் - ஐந்து ரதங்கள் இடையே, கடற்கரையை ஒட்டியவாறு நேரடியாக செல்ல, புதிய சாலை அமைக்க வேண்டியது அவசியம். அரசு அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
- சுற்றுலா ஆர்வலர்கள்