/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவர்கள் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 16, 2025 01:14 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, நில அளவர்கள், 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை, மீண்டும் தரம் உயர்த்தி வழங்க வேண்டும்.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட குறுவட்டங்கள் மற்றும் கோட்டங்களுக்கு, குறுவட்ட அலுவலர் மற்றும் ஆய்வாளர் பணியிடம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, நில அளவர் பணிக்காக தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளன.
நில அளவர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவை பணிகளுக்கு, நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்.
ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தால், மாவட்டம் முழுதும் பணிகள் பாதிக்கப்பட்டன.