/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின் அழுத்தம் பெருந்தண்டலத்தில் அவதி
/
குறைந்த மின் அழுத்தம் பெருந்தண்டலத்தில் அவதி
ADDED : அக் 04, 2024 08:42 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, குறைந்த மின் அழுத்தம் காரணமாக அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரை பயன்படுத்த முடியாததால், மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில், அடிக்கடி சிக்கல் உருவாகிறது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த மின் அழுத்த பிரச்னை இருந்து வருகிறது. இதனால், 'டிவி' மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள், அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மின் தடங்கள் பல இடங்களில் தாழ்வாகவும், மரக்கிளைகளில் உரசியபடியும் செல்வதால், மழை மற்றும் காற்று அடிக்கும் போது மின் தடை ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை பெய்த சிறு மழைக்கே, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு, இரவு முழுதும் சரி செய்யப்படவில்லை. இதனால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்தனர்.
எனவே, குறைந்த மின் அழுத்த பிரச்னையை சரி செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.