ADDED : ஏப் 23, 2026 10:17 PM
திருப்போரூர்: குன்னப்பட்டு ஊராட்சி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு முடியும் அரைமணி நேரத்திற்கு முன், தேர்தல் அலுவலர்கள் இயந்திர செயல்பாட்டை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட குன்னப்பட்டு ஊராட்சியில் உள்ள 214 வது ஓட்டுச்சாவடியில் 691 வாக்காளர்கள் உள்ளனர்.
மாலை 5:00 மணி நிலவரப்படி 648 வாக்காளர்கள் ஓட்டளித்தனர். மீதம் 43 பேர் ஓட்டளிக்காமல் இருந்தனர். அவர்கள் இதன் பிறகு ஓட்டளிக்க வரமாட்டார்கள் என உத்தேசமாக கருதி மாலை 5:30 மணிக்கு மேல் ஓட்டு பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை தேர்தல் அலுவலர்கள் நிறுத்தினர்.
இந்நிலையில் மாலை 5:40 மணிக்குமேல் 3 பேர் ஓட்டு போட வந்துள்ளனர். அப்போது இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தி விட்டதாகவும், ஓட்டுபோட இயலாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தேர்தல் அலுவலர் மூலமாக, மாவட்ட கலெக்டருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 7:00 மணியளவில், திருப்போரூர் தேர்தல் அலுவலகத்திலிருந்து, ஒரு புதிய ஒட்டுபதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டு மேற்கண்ட 3 பேர் புதிய இயந்திரத்தில் ஓட்டளித்தனர்.
