/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை
/
மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை
மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை
மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை
ADDED : மார் 08, 2024 12:30 PM

சென்னை:தாம்பரம் அருகில் நகர்ப்புற நில தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ள மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் ஆகிய கிராமங்களில், புதிய கட்டட அனுமதிகள் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதி மறுமேம்பாடு செய்யப்பட உள்ளது. இதே போல, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி கிராமங்களில் நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இங்கு காலியாக உள்ள தனியார் நிலங்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு, திட்டமிட்ட நகர்ப்புற பகுதியாக மேம்படுத்தப்படும். தரமான சாலை, பூங்காக்கள் என, அனைத்து வசதிகளும் அடங்கிய மனைப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
பற்றாக்குறை
மத்திய அரசின் நிதி உதவியுடன் இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகளை, 2021ல் சி.எம்.டி.ஏ., துவக்கியது. இது குறித்து நில உரிமையாளர்கள் கருத்துகள் பெறப்பட்டு, வரைவு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
சென்னை பெருநகரில், நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதனால், திட்டமிடல் இன்றி பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் உருவாகின்றன.
முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாகும் இத்தகைய பகுதிகளில், ஏராளமானோர் நிலம் வாங்கி, வீடு கட்டி குடியேறுகின்றனர். இவ்வாறு மக்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறிய பின், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகள் எழுகின்றன.
போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவது, சாலை விரிவாக்க திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மற்றும் குடியிருப்புகளின் நெருக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய பிரச்னைகள் இல்லாமல், முன்மாதிரியாக ஒரு பகுதியை மேம்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்காக, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பகுதிக்கான நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரியில் இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி பகுதியில் நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்ட பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
உத்தரவு
நகர்ப்புற நில தொகுப்பு திட்டம் தொடர்பாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா சார்பில், மாடம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாடம்பாக்கம் பேரூராட்சி, தற்போது தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு, 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் தொடர்பான சர்வே எண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களில் மனை உட்பிரிவு செய்தல், புதிய கட்டட அனுமதி வழங்கல் தொடர்பான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது.
இது போன்ற விண்ணப்பங்கள் வந்தால், அது குறித்த விபரங்களை சி.எம்.டி.ஏ.,வுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

