/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
1,793 ஏக்கர் விவசாய நிலத்தில் சர்வதேச நகரம் அமைக்க...எதிர்ப்பு! மதுராந்தகம் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி
/
1,793 ஏக்கர் விவசாய நிலத்தில் சர்வதேச நகரம் அமைக்க...எதிர்ப்பு! மதுராந்தகம் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி
1,793 ஏக்கர் விவசாய நிலத்தில் சர்வதேச நகரம் அமைக்க...எதிர்ப்பு! மதுராந்தகம் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி
1,793 ஏக்கர் விவசாய நிலத்தில் சர்வதேச நகரம் அமைக்க...எதிர்ப்பு! மதுராந்தகம் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி
UPDATED : நவ 14, 2025 10:29 PM
ADDED : நவ 14, 2025 08:59 PM

செங்கல்பட்டு, : மதுராந்தகம் பகுதியில், தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம், 1,945 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச நகரம் அமைக்க உள்ளது. இதற்காக, அப்பகுதியிலுள்ள 1,793 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த உள்ளதால், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில், பாலாறு அருகிலுள்ள கிராமங்களில், இருபோகம் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சென்னை, கோயம்புத்துார், திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் தொழில் வளர்ச்சி அதிகம் இருப்பதால், அந்த நகரங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, வேலைக்காக மக்கள் செல்கின்றனர்.
இதனால், இந்த நகரங்களின் எல்லை பகுதிகள் விரிவடைந்து உள்ளன. இதையடுத்து, இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இதனால், அரசுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே, மக்களின் அனைத்து தேவைகளையும் ஒரே பகுதியில் பூர்த்தி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, சென்னைக்கு அருகில், 1,945 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு, இந்தாண்டு பட்ஜெட்டில் வெளியானது.
சர்வதேச நகரை உருவாக்க செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யும் பணியை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், 1,945 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க இடம் தேர்வாகியுள்ளது.
இந்த சர்வதேச நகரில் வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, வேலைவாய்ப்புகள், வணிக வளாகம், வங்கிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை, சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும்.
இந்நகரத்துடன் சென்னை போன்ற பெருநகரங்களை இணைக்கும் வகையில் சாலை, ரயில் பாதை உள்ளிட்டவை உருவாக்கப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் தாலுகாவில் அத்திமனம், ஜனாகிபுரம், கள்ளபிரான்புரம், படாளம், பழையனுார், புலிப்புரக்கோவில் ஆகிய கிராமங்களில், 1,607 ஏக்கர் நன்செய் நிலம், 186 ஏக்கர் புன்செய் நிலம் என, 1,793 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலங்களின் உரிமையாளர்கள் விபரங்களை கணக்கெடுக்கும் பணியில், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, வாக்காளர் படிவம் வழங்கும் எஸ்.ஆர்.ஐ., பணிகள் நடைபெற்று வருவதால், நில விபரங்கள் சேகரிக்கும் பணியை, தற்காலிகமாக வருவாய்த் துறையினர் நிறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, மதுராந்தகம் தாலுகா பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அத்துடன், தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு சர்வதேச நகரம் அமைக்க, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நன்செய் நிலத்தை தவிர்த்து, அரசு நிலம் மற்றும் புன்செய் நிலங்களில் சர்வதேச நகரம் அமைக்கலாம். நன்செய் நிலத்தில் சர்வதேச நகரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களை இத்திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். - பழையனுார் எம்.மணி, தமிழ்நாடு விவசாயிகள் நலன், நீர்நிலைகள் பாதுகாப்பு சங்க தலைவர், செங்கல்பட்டு

