/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
ADDED : டிச 04, 2024 11:12 PM

கூவத்துார், கூவத்துார், அங்காள பரமேஸ்வரி கோவில் மஹாகும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
கல்பாக்கம் அடுத்த கூவத்துாரில், சில நுாற்றாண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில், பிரசித்தி பெற்றது.
விஜயநகர ஆட்சியில், இக்கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. மூலவர் அங்காள பரமேஸ்வரி, விநாயகர், பாலமுருகர், துர்க்கை, மதுரை வீரன், பாவாடைராயன், சப்த கன்னியர் ஆகியோர் வீற்றுள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மாமல்லபுரத்தில் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், கோவிலை கடந்த 2008 முதல் நிர்வகித்து வருகிறது.
அதே ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 15 ஆண்டுகள் கடந்த நிலையில், மஹா கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.
இதையடுத்து, நுழைவாயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, மூலவர் சன்னிதி புனரமைக்கப்பட்டது.
மகாமண்டபத்தில் தீட்டியிருந்த சுண்ணாம்பு, வண்ணம் ஆகியவற்றை நீக்கி, கட்டுமான கற்கள் இயற்கை நிறம் வெளிக்கொணரப்பட்டது. நடைதளம் கருங்கல்லில் மேம்படுத்தப்பட்டது.
கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி, இவ்வூர்அனைத்து கோவில்களிலும், சுவாமியருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்கோவிலில் கணபதி பூஜை, புண்யாஹவாசன், வாஸ்து சாந்தி என, சடங்குகள் துவக்கப்பட்டன. இன்று காலை, நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, 8:00 முதல் 9:00 மணிக்குள் ராஜகோபுரம், விநாயகர், அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட சுவாமியருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.