/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் நால்வர்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
/
திருக்கழுக்குன்றம் நால்வர்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
திருக்கழுக்குன்றம் நால்வர்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
திருக்கழுக்குன்றம் நால்வர்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : பிப் 22, 2024 10:31 PM

திருக்கழுக்குன்றம், சைவ சமயம், தமிழ் மொழி வளர்த்து, சிவபெருமானை போற்றிய சமயக் குரவர்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர். வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த இவர்கள், திருக்கழுக்குன்றத்தில் வீற்றுள்ள வேதகிரீஸ்வரரையும் போற்றி பாடியுள்ளனர்.
நான்கு வேதங்களே மலைக்குன்றுகளாக உருவெடுத்து, குன்றின் மீது சிவபெருமான் வீற்றுள்ள நிலையில், வேதங்களின் புனிதம் கருதி, நால்வரும் குன்றில் ஏறாமல் தவிர்த்து, வேதகிரீஸ்வரர் குன்று கோவிலின் கிழக்கில், கிரிவலப் பாதை பகுதியிலிருந்தே, சுவாமியை நோக்கி பாடியுள்ளனர்.
இதன் காரணமாக, இப்பகுதி நால்வர்கோவில்பேட்டை என அழைக்கப்படுகிறது. சில நுாற்றாண்டுகளுக்கு முன், இங்கு அவர்களுக்கு கோவில் அமைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறை, வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின்கீழ் உள்ள இக்கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த 2002ல் நடந்தது. அதன்பின் மீண்டும் நடத்தப்படவில்லை.
மேலும், இக்கோவில் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. அதை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தினர்.
தற்போது உபயதாரர்கள் சார்பில் கோவிலிலை புனரமைத்து, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த பிப்., 19ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து, காலை 9:45 மணிக்கு விமானம், நால்வர், உற்சவ மூர்த்திகள், நால்வர் திருவடிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.